மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் ஸ்ரீ பெரும்புதூரில் இருந்து ராஜீவ் ஜோதி யாத்திரை தொடங்கியது: 20ம் தேதி டெல்லி சென்றடைகிறது

சென்னை: மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் ஸ்ரீ பெரும்புதூரில் இருந்து ராஜீவ் ஜோதி யாத்திரை தொடங்கியது. வரும் 20ம் தேதி டெல்லியை சென்றடைகிறது. மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி புகழை பரப்பும் வகையில் தமிழகத்தில் இருந்து, வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் கடந்த 3 ஆண்டுகளாக ராஜீவ் ஜோதி யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. கன்னியாகுமரியில் தொடங்கி 40 மாவட்டங்கள் வழியாக ஸ்ரீபெரும்புதூர் வரையிலும், பின்னர் ராஜீவ் காந்தி பிறந்த நாள் அன்று ஸ்ரீ பெரும்புதூரில் இருந்து பல மாநிலங்கள் வழியாக டெல்லியில் உள்ள அவரது நினைவிடம் வரை எடுத்து செல்வது வழக்கம்.

அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு எம்.எஸ்.திரவியம் தலைமையில் ராஜீவ் ஜோதி யாத்திரை இன்று காலை ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் இருந்து தொடங்கியது. இந்த யாத்திரையை, தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சிரஞ்சீவி, ஜோதியை ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், கவுன்சிலர்கள் சுரேஷ்குமார், தீர்த்தி, மாநில செயலாளர் மோகன்காந்தி மற்றும் மாவட்டத்திற்கு உட்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், யாத்திரை குழு நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த யாத்திரையானது, 30 பேருடன் 5 வாகனங்களில் தரைவழி மார்க்கமாக பல மாநிலங்கள் வழியாக எடுத்து செல்லப்படுகிறது. செல்லும் வழிகளில் ராஜீவ் காந்தி புகழை பரப்பும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்க உள்ளனர். செல்லும் வழியில் பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநில காங்கிரஸ் கமிட்டி சார்பில் யாத்திரை குழுவுக்கு வரவேற்பு அளிக்க உள்ளதாக மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் தெரிவித்தார்.

 

The post மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் ஸ்ரீ பெரும்புதூரில் இருந்து ராஜீவ் ஜோதி யாத்திரை தொடங்கியது: 20ம் தேதி டெல்லி சென்றடைகிறது appeared first on Dinakaran.

Related Stories: