புனித மேரிஸ் பேராலய 186வது ஆண்டு விழா

*மின்னொளியில் ஜொலிக்கும் தேவாலயம்

ஊட்டி : ஊட்டி செயின்ட் மேரீஸ் தேவாலய விண்ணேற்பு பெருவிழா வருகிற 15ம் தேதி நடக்கிறது. இதையொட்டி தேவாலயம் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.
நீலகிரியின் முதல் கத்தோலிக்க பேராலயமான செயின்ட் மேரீஸ் ஆலயம் ஊட்டியில் உள்ளது. இந்த ஆலயத்தில் 186வது ஆண்டு விழா கடந்த 4ம் தேதி தொடங்கியது. காலை 6.15 மணிக்கு உதவி பங்கு குரு டிக்சன் ஜான் ரோசரியோ ஆங்கில திருப்பலியை நிறைவேற்றினார்.

தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. ஆடம்பர பவனியில் அன்னையின் திருவுருவம் பொருந்திய கொடியை இந்துநகர் தூய லூர்து அன்னை ஆலய பங்கு குரு பெனடிக்ட் ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார். பின்னர் கிறிஸ்துமஸ் மரக்கன்று நடப்பட்டது. நவநாள் மறையுரை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் ஒவ்வொரு நாளும் பிரார்த்தனை நடைபெற்றது.

நேற்று பங்குதந்தைகள் பிராங்களின் லூக்காஸ், அந்தோணிராஜ் ஆகியோர் தலைமையில் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பிராத்தனை செய்தனர். 15ம் தேதி சுதந்திர தினத்தன்று அன்னையின் விண்ணேற்பு பெருவிழா மற்றும் பங்கு திருவிழா மறை மாவட்ட முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ் தலைமையில் நடைபெறுகிறது.

அன்றைய தினம் பங்கு தந்தைகள் வின்செண்ட், மற்றும் ஞான தாஸ் ஆகியோர் திருப்பலி நடத்துகின்றனர். சுதந்திர தின விழாவையொட்டி தேசியக்கொடியும் ஏற்றப்படுகிறது. விழாவையொட்டி மேரீஸ் ஆலயம் வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது. அனைத்து ஏற்பாடுகளையும் பங்கு குருக்கள், இளைஞர் இயக்கம் செய்து வருகின்றனர்.

The post புனித மேரிஸ் பேராலய 186வது ஆண்டு விழா appeared first on Dinakaran.

Related Stories: