அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம், ‘அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது’ என கடந்த ஆண்டு குற்றம் சாட்டியிருந்தது. இந்த விவகாரம் நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலித்தது. இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாக செபி விசாரணை நடத்தி வந்தது. ஆனால், செபியின் விசாரணை நேர்மையாக நடைபெறவில்லை என்று, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘செபியின் அதிகார வரம்பில் உச்ச நீதிமன்றம் ஓரளவுக்கு மேல் தலையிட முடியாது.
மேலும், ஒரு வழக்கை சிறப்பு விசாரணைக் குழுவுக்கு மாற்ற வேண்டுமானால் அதற்கு வலுவான காரணங்கள் வேண்டும். எனவே, செபியே இந்த விவகாரத்தைத் தொடர்ந்து விசாரிக்கும்’ என தனது உத்தரவில் தெரிவித்து விட்டது. இந்த நிலையில்தான், இந்திய பங்கு பரிவர்த்தனை கட்டுப்பாட்டு வாரிய (செபி) தலைவரும் அவரது கணவரும் அதானி நிறுவனத்துடன் தொடர்புடைய நிறுவனங்களில் பங்கு வைத்திருப்பதாக, ஹிண்டன்பர்க் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறது.
இது தொடர்பான ஆவணங்களை வெளியிட்டு, ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியுள்ளது. ஹிண்டன்பர்க் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: செபி தலைவர் மாதபி புரி புச், அவரது கணவர் தவல் ஆகிய இருவரும், வெளிநாட்டு நிறுவனம் மூலம் அதானி குழும பங்குகளில் முதலீடு செய்துள்ளனர். இவர்கள் ‘360 ஒன் டபிள்யூஏஎம்’ என்ற நிதி மேலாண்மை அமைப்பின் மூலம் இந்த முதலீட்டை மேற்கொண்டுள்ளனர். இந்த நிதி மேலாண்மை அமைப்பு, ஐஐஎப்எல்-ன் (இந்தியா இன்போலைன் பைனான்ஸ் நிறுவனம்) கட்டுப்பாட்டில் உள்ளது.
ஐஐஎப்எல் ஆவணத்தில் மாதவி புச் பெயர், அவர் எவ்வாறு, எப்போது முதலீடு செய்தார் என்ற விவரங்கள் இடம் பெற்றுள்ளன. மாதபி புச் சம்பள வருமானத்தில் இந்த முதலீட்டை மேற்கொண்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு மாதபி புச்சும், அவரது கணவர் தவலும் சிங்கப்பூரில், ‘360 ஒன் டபிள்யூஏஎம்’ என்ற நிதி மேலாண்மை அமைப்பின் ‘ஐபிஇ பிளஸ் ஃபண்ட் 1’ கணக்கைத் துவக்கியுள்ளனர். அடுத்த இரண்டாண்டுகளில், அதாவது, 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் செபி உறுப்பினராக மாதபி புச் நியமிக்கப்பட்டார்.
இதற்கு ஒரு மாதம் முன்பாக, அதே ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த நிதி மூலம் மேற்கொண்ட பங்கு முதலீடுகள் முழுவதும் மாதபின் கணவர் தவல் பெயருக்கு மாறுகின்றன. இந்த பங்குகளில் இருந்து மாதபி தன்னை விடுவித்துக் கொண்டார். 2017 ஏப்ரல் முதல் 2022 மார்ச் வரை செபியின் முழு நேர உறுப்பினராக மாதபி இருந்து, பின்னர் தலைவராக பொறுப்பேற்கும் தருணத்தில், சிங்கப்பூரைச் சேர்ந்த அகோரா பார்ட்னர்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார்.
ஆனால், செபி தலைவராகப் பொறுப்பேற்று 2 வாரங்களுக்குப்பிறகு, 2022 மார்ச் 16ம் தேதி, தனது பெயரில் இருந்த பங்குகள் அனைத்தையும் அவசர கதியில் தனது கணவர் பெயருக்கு மாற்றி, அந்த நிறுவனத்தை அவருக்கு சொந்தமாக்குகிறார். வெளிநாட்டு நிறுவனம் என்பதால், இந்தியப் பங்குகளில் முதலீடு செய்த விவரங்கள் குறித்து நிதிநிலை அறிக்கை வெளியிட வேண்டிய அவசியமில்லை. எனவே, இந்த நிறுவனம் மூலம் எவ்வளவு முதலீடு மேற்கொள்ளப்பட்டது என்ற விவரங்கள் மூடுமந்திரமாகவே உள்ளது.
இருப்பினும், அகோரா அட்வைசரி பிரைவேட் லிமிடெட் என்ற மும்பையிலுள்ள ஆலோசனை நிறுவனத்தில் 99 சதவீத பங்குகள் மாதபிக்கு உள்ளன. இந்த நிறுவனத்தின் இயக்குநராக அவரது கணவர் தவல் உள்ளார் என ஹிண்டன்பர்க் குறிப்பிட்டுள்ளது. இப்படி செபியில் பொறுப்பேற்கும் முன்பும், பொறுப்பேற்ற பின்னும் தனது அடையாளத்தை மாற்றுவதற்காக அல்லது நிதி பரிவர்த்தனை செயல்பாடுகளை மறைப்பதற்காக மாதபி தனது கணவர் பெயருக்கு நிறுவன பொறுப்புகள், பங்குகள் ஆகியவற்றை மாற்றியது பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளது.
செபி தலைவராக உள்ளவர் எந்த நிறுவனத்திலும் முதலீடு செய்யக்கூடாது என்பது ஒரு புறம் இருக்க, அதானி குழும முறைகேட்டை விசாரிக்கும் பொறுப்பில் உள்ள செபி தலைவரே அதானி குழுமங்களில் முதலீடு செய்துள்ளது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், அதானி குழும முறைகேடு மீதான செபியின் விசாரணை நியாயமாக நடந்திருக்க வாய்ப்பில்லை என்பதை ஹிண்டன்பர்க் அறிக்கை நிரூபித்துள்ளது என சந்தை நிபுணர்கள் பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
பங்கு முதலீட்டின் மூலம் அதானி குழுமத்துடன் செபி தலைவருக்கு உள்ள தொடர்பு, செபி விசாரணையில் உள்ள நேர்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து கார்கே எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஹிண்டன்பர்க் அம்பலப்படுத்தியுள்ள இந்த மெகா ஊழலை நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரிக்க வேண்டும்.
நாடாளுமன்றக் கூட்டுக்குழு இந்த விவகாரத்தை விசாரிக்கும் வரை, பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் அரசியலமைப்பு நிறுவனங்களை சமரசம் செய்து, தனது கூட்டாளியை தொடர்ந்து பாதுகாப்பார் என்ற கவலைகள் நீடிக்கும். அதானி குழுமம் தொடர்பான விசாரணையில் உள்ள அனைத்து முரண்பாடுகளையும் களைய அரசு உடனடியாக செயல்பட வேண்டும். 2023 ஜனவரியில் அதானி குழுமம் தொடர்பான ஹிண்டன்பர்க் அறிக்கையை தொடர்ந்து பிரதமர் மோடியின் நெருங்கிய கூட்டாளியான அதானியின் குழுமம் முறைகேட்டில் ஈடுபடவில்லை என செபி நற்சான்று வழங்கியது.
ஆனால், தற்போதைய புதிய குற்றச்சாட்டுகள், இந்த விவகாரத்தில் செபி தலைவரின் தொடர்பை அம்பலப்படுத்துவதாக அமைந்திருக்கின்றன. பாடுபட்டு சம்பாதித்து பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் சாமானிய மக்களின் நலன் பாதுகாக்கப்படவேண்டும். அவர்கள் செபியின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள்’ என குறிப்பிட்டுள்ளார். அதேநேரத்தில், ‘‘காங்கிரசும் பிற எதிர்க்கட்சிகளும் இந்தியாவில் நிதி ஸ்திரத்தன்மையின்மை மற்றும் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது’’ என பாஜ செய்தித்தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி கூறியுள்ளார்.
* கவுதம் அதானியுடன் 2 முறை சந்திப்பு
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், கூறுகையில், ‘‘அதானி மெகா ஊழலை விசாரிக்க செபி விசித்திரமான முறையில் தயக்கம் காட்டி வந்தது நீண்டகாலமாக கவனத்துக்குள்ளானது. ஹிண்டன்பர்க் அறிக்கைமூலம் புச் மற்றும் அவரது கணவர் பெர்முடா மற்றும் மொரீஷியஸை தலைமையகமாகக் கொண்ட வெளிநாட்டு நிதிகளில் முதலீடு செய்ததைக் காட்டுகின்றன. அதில் வினோத் அதானி மற்றும் அவருக்கு நெருக்கமான சாங் சுங்-லிங், நாசர் அலி ஷாபான் அலி ஆகியோர் மின்சாதனங்களை அதிக விலைக்கு வாங்கியதாக காட்டி சம்பாதித்த பணத்தையும் முதலீடு செய்துள்ளனர்.
இந்த நிதி, செபி விதிமுறைகளை மீறி அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்ய பயன்படுத்தப்பட்டிருக்கலாம். மாதபி செபியின் தலைவரானபோது, 2022ல் அவருடன் இரண்டு முறை அதானி சந்தித்தது சந்தேக கேள்விகளை எழுப்புகிறது. எனவே இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை அவசியம்’’ என குறிப்பிட்டுள்ளார். இதுபோல், எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும், இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
* பொறுப்பேற்பது யார்? ராகுல் காந்தி கேள்வி
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், ‘‘சிறு பங்கு முதலீட்டாளர்களின் பணத்தை பாதுகாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபியின் நேர்மை, அதன் தலைவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளால் கடுமையாக சமரசம் செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள செபி தலைவர் மாதபி பூரி புச் ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை? முதலீட்டாளர்கள் தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழந்தால், யார் பொறுப்பேற்பது? பிரதமர் மோடியா, செபி தலைவரா அல்லது கவுதம் அதானியா?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
* அதானி குழுமத்தில் முதலீடு செய்யவில்லை: மாதபி மறுப்பு
தங்கள் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என, செபி தலைவர் மாதபி புச் மற்றும் அவரது கணவர் தவல் ஆகியோர் மறுப்புத் தெரிவித்துள்ளனர். எங்களது வாழ்க்கையும், நிதி நிர்வாகமும் திறந்த புத்தகத்தை போன்றதாகும். ஆனால், இந்த அறிக்கையில் எங்கள் மீது உள்நோக்கத்துடன் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது ஏற்க முடியாதது. பொதுவெளியில் கிடைக்கும் தகவல்களை கொண்டு தனிப்பட்ட லாபம் ஈட்ட இதுபோன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. ஹிண்டன்பர்க் ஏற்கெனவே தெரிவித்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
எங்களின் வெளிநாட்டு முதலீடுகள் வெளிப்படையானவை. அதானி குழுமத்தில் நானும் எனது கணவரும் எந்த முதலீடும் செய்யவில்லை. எனது கணவரின் சிறுவயது நண்பர் அனில் அகுஜா நாங்கள் முதலீடு செய்த நிதி மேலாண்மை நிறுவனத்தில் முதன்மை முதலீட்டு அதிகாரியாக இருந்தார் என கூறியுள்ளனர். இதுபோல், அதானி நிறுவனமும் ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை. என மறுப்பு தெரிவித்துள்ளது. அனில் அகுஜாவும், மாதபியின் பணம் அதானி குழுமத்தில் முதலீடு செய்யவில்லை என மறுத்துள்ளார்.
* தான் முதலீடு செய்த நிறுவனங்கள் மீதான புகார்களை மாதபி விசாரிக்கவில்லை செபி திடீர் விளக்கம்
அதானி குழுமத்தில் தான் எந்த முதலீடும் செய்யவில்லை என செபி தலைவர் மாதபி புச் அறிவித்துள்ள நிலையில், செபி சார்பில் நேற்று மாலை விளக்க அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ‘தான் முதலீடு செய்த நிறுவனங்கள் தொடர்பான விவகாரங்களில் மாதபி தலையிடுவதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அதானிக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் இறுதியாக 26வது குற்றச்சாட்டு குறித்து செபி விசாரணை நடத்தி வருகிறது. இது முடிவடையும் தருவாயில் உள்ளது என செபி தெரிவித்துள்ளது.
* ‘இனி பின்தொடர முடியாது’எக்ஸ்தள கணக்கின் கதவை அடைத்தது செபி
செபி தலைவர் மீது குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் ஹிண்டன்பர்க் நேற்று முன்தினம் வெளியிட்டது. இதையடுத்து நேற்று எக்ஸ் வலைதள பக்கத்தை அதனால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் தவிர யாரும் பின்தொடர முடியாத வகையில் செபி எக்ஸ்தள கணக்கின் கதவை அடைத்து பூட்டுப்போடப்பட்டு விட்டது. ஞாயிற்றுக்கிழமை சந்தை விடுமுறை நாளாக இருந்தும், இந்த திடீர் நடவடிக்கை செபி தலைவரின் அதிகார துஷ்பிரயோகம் எந்த அளவுக்குச் சென்றிருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதாக பலரும் விமர்சித்துள்ளனர்.
* யார் இந்த மாதபி புச்?
செபி தலைவராக இருந்த அஜய் தியாகியின் 5 ஆண்டு பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து அடுத்ததாக, 2022 மார்ச் 1ம் தேதி அந்தப் பொறுப்பில் 3 ஆண்டுக்கு நியமிக்கப்பட்டவர் மாதபி பூரி புச். செபியின் முதல் பெண் தலைவர், இந்தப் பொறுப்புக்கு 56 வயதிலேயே வந்த முதல் நபர், ஐஏஎஸ் அல்லாதவர் என பல தனிச்சிறப்புகள் இவருக்கு உண்டு.
டெல்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரி மற்றும் அகமதாபாத் ஐஐஎம்மில் படித்த இவர், திட்ட நிதி ஆலோசகராக ஐசிஐசிஐ வங்கியில் 1989ம் ஆண்டு சேர்ந்தார். 1992 வரை அங்கு பணி புரிந்தார். பின்னர் 1997ல் மீண்டும் ஐசிஐசிஐயில் சேர்ந்து ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் சிஇஓ-ஆக 2009 முதல் 2011 வரை பணியாற்றியுள்ளார். 1966ம் ஆண்டு பிறந்த இவருக்கு, 18 வயதிலேயே யுனிலீவர் இயக்குநரான தவலுக்கும் திருமணம் நிச்சயமாகி, 21 வயதில் திருமணம் நடந்துள்ளது.
* பங்குச்சந்தையில் பாதிப்பு ஏற்படுமா?
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்ததை தொடர்ந்து, அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் 20 சதவீதத்துக்குமேல் சரிவைச் சந்தித்தன. அதானி குழும பங்குகளின் மதிப்பு ரூ.3 லட்சம் கோடி குறைந்தது. தற்போது அதானி குழுமத்துக்கும் செபி தலைவருக்குமான தொடர்பை ஆதாரத்துடன் ஹிண்டன்பர்க் வெளிப்படுத்தியதால், இதன் தாக்கம் இன்றைய பங்குச்சந்தையில் எதிரொலிக்கலாம் என, பங்கு முதலீட்டாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த வார பங்குச்சந்தையின் போக்கை ஹிண்டன்பர்க் விவகாரம்தான் தீர்மானிக்கும் என சந்தை நிபுணர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.
The post அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் பரபரப்பு குற்றச்சாட்டு அதானி குழுமத்துடன் செபி தலைவருக்கு தொடர்பு: நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.