ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதி நாகேந்திரனை போலீஸ் காவலில் விசாரிக்க திட்டம்: தேசிய தகவல் மைய உதவியுடன் சம்பவ செந்திலுக்கு வலைவீச்சு

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த மாதம் 5ம் தேதி பெரம்பூரில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில்22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான சதி திட்டத்தை வகுத்து கொடுத்தது, பல ரவுடிகளை ஒருங்கிணைத்தது அஸ்வத்தாமனின் தந்தையான, வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள பிரபல தாதா நாகேந்திரன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கான கைது உத்தரவு நேற்று முன்தினம் வழங்கப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக நாகேந்திரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக, தண்டையார்பேட்டையை சேர்ந்த ரவுடி சம்பவ செந்தில், தாம்பரம் மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்த ரவுடி சீசிங் ராஜா ஆகிய இருவரையும் பிடிக்க தனிப்படை தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் சம்பவ செந்திலை நேரில் பார்த்தே கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகிறது என போலீசார் தெரிவிக்கின்றனர்.

தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருக்கும் அவர், தனது வழக்கறிஞர் நண்பர்கள், ரவுடி கூட்டாளிகளை கூட இன்டர்நெட் கால் அல்லது மோடம் மற்றும் 11 ஆன்லைன் செயலிகள் மூலமாகவே தொடர்பு கொண்டு பஞ்சாயத்து, கொலை உள்ளிட்ட சதி செயல்களுக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்து வந்துள்ளார். சம்பவ செந்திலின் கூட்டாளி ஈஷாவிடம், 10 இன்டர்நெட் கால் எண்களை போலீசார் பெற்றுள்ளனர். கடந்த ஓராண்டில் இந்த எண்களில் இருந்துதான் சம்பவ செந்தில், ஈஷா உள்ளிட்ட தனது சகாக்களிடம் தொடர்பு கொண்டது தெரியவந்துள்ளது. சென்னை சைபர் க்ரைம் போலீசார் தீவிர முயற்சி செய்தும் சம்பவ செந்திலை நெருங்க முடியவில்லை.

இந்நிலையில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகத்தின் கீழ், டெல்லியில் செயல்படும் தேசிய தகவல் மையத்தின் உதவியை சென்னை போலீசார் நாடியுள்ளனர். ஒன்றிய புலனாய்வு அமைப்புகளுக்கு பல்வேறு வகையில் தேசிய தகவல் மையம் உதவிகரமாக உள்ளது. குறிப்பாக பயங்கரவாதிகளின் தகவல் தொடர்புகளை நவீன தொழில்நுட்ப கருவிகள் மூலம் கண்டறிந்து அவர்கள் இருப்பிடத்தை புலனாய்வு அமைப்புகளுக்கு தெரிவிக்க, தேசிய தகவல் மையம் உதவி செய்கிறது.

சம்பவ செந்தில் தொடர்ந்து போலீசாரின் பிடியில் சிக்காமல் இருப்பதால் தேசிய தகவல் மையத்தின் உதவியுடன் அவரது இருப்பிடத்தை கண்டறிந்து கைது செய்வதற்கான வேலையில் சென்னை போலீசார் மும்முரமாக இறங்கி உள்ளனர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தற்போது போலீஸ் காவலில் உள்ள ஹரிதரன் மற்றும் வழக்கறிஞர் சிவா ஆகிய இருவரின் போலீஸ் காவல் நேற்றுடன் முடிவடைந்ததால் அவர்களை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பூந்தமல்லி கிளை சிறையில் அடைத்தனர்.

இவர்களிடம் கடந்த 5 நாட்களாக விசாரணை நடத்தியதில் சம்பவ செந்தில் தனது கூட்டாளியான வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் (எ) மொட்டை கிருஷ்ணா மூலம் ரூ.9 லட்சத்தை கொடுத்து வழக்கறிஞர் சிவாவிடம் கொடுக்கும்படி கூறியுள்ளார். அந்த பணம் வழக்கறிஞர் சிவாவிடம் கொடுக்கப்பட்டுள்ளது. கொலை சம்பவம் முடிந்தவுடன் கொலையாளிகளுக்கு தர அந்த பணம் கொடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

வழக்கறிஞர் சிவாவை போலீசார் கைது செய்த போது அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் மொட்டை கிருஷ்ணா தற்போது தலைமறைவாக உள்ளார். அவர் குறித்த தகவல்கள் மற்றும் சம்பவ செந்தில் குறித்த தகவல்கள்பற்றி வழக்கறிஞர் சிவாவிடம் தனிப்படை போலீசார் கடந்த 5 நாட்களாக விசாரித்துள்ளனர். அதன்படி, மொட்டை கிருஷ்ணா வீட்டில் இருந்து பல்வேறு முக்கிய ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.

மேலும், காவலில் எடுத்து விசாரித்த மற்றொரு நபரான ஹரிதரன் செல்போன் ஆதாரங்களை ஆற்றில் போட்டு அழித்த நபர் என்பதால் அவருக்கும் இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் போலீசார் 5 நாட்களாக தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். முதலில் கைது செய்யப்பட்ட 11 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க செம்பியம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதி நாகேந்திரனை போலீஸ் காவலில் விசாரிக்க திட்டம்: தேசிய தகவல் மைய உதவியுடன் சம்பவ செந்திலுக்கு வலைவீச்சு appeared first on Dinakaran.

Related Stories: