ஊட்டி : தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளரும் கோத்தகிரி லாங்வுட்ஸ் சோலை வாட்ச் டாக் கமிட்டி செயலருமான கே.ஜே.ராஜு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீலகிரியை பொறுத்தவரையில் தொட்டபெட்டா பகுதி சிறப்பு தன்மை வாய்ந்தது. அங்குள்ள வட்ட இலை விக்கி மரம் உலகில் வேறு எங்கும் காணப்படுவதில்லை. இங்கு நீல நிறத்தில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன. தொட்டபெட்டாவின் மலைப் பகுதியில் இருந்து ஊட்டி நோக்கி வரும் போது, 100க்கும் மேற்பட்ட காட்டுப் பூக்களை நம்மால் காண முடிகிறது. தொட்டபெட்டா பகுதி உள்ளூர் தாவர இனங்களின் ரீ ஜெனரேஷன் எனப்படும் தாவரங்களின் மறு உருவாக்கத்திற்கு பெயர் பெற்றது.
அங்குள்ள கற்பூரமரங்களுக்கு இடையில் தவிட்டுப்பழ மரங்களும், இதர உள்ளூர் தாவர இனங்களும் செழித்து வளர்ந்துள்ளது. 200 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நீலகிரி பல்லுயிர் சூழலை மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கையை தரும் இத்தகைய பல சிறப்புகளைக் கொண்ட தொட்டபெட்டா மலைப்பகுதி தற்போது சிஸ்டம் ரோபஸ்டிகம் என்று அழைக்கப்படும் அந்நிய களை செடியினால் அழியும் தருவாயில் உள்ளது.
நீலகிரி மாவட்டத்தின் பல்லுயிர் சூழல் காக்கும்வகையில் உயர் நீதிமன்றம் நீலகிரி மாவட்டத்திலுள்ள அந்நிய தாவர இனங்களை அகற்ற வேண்டும் என அண்மையில் உத்தரவிட்டது. அதை செயல்படுத்தாத வனத்துறை அதிகாரிகளையும் நீதிமன்றத்திற்கு அழைத்து கண்டனம் தெரிவித்ததுள்ளது. இதனையொட்டி சில பகுதிகளில் கற்பூர மரங்களும் சீகை மரங்களும் பெயரளவில் அகற்றப்பட்டது.ஆனால், இந்த அந்நிய நாட்டு தாவர இனங்களின் பிரச்னை பூதாகரமாக உள்ளது.
தென் அமெரிக்காவிலிருந்து வந்துள்ள இந்த சிஸ்டம் ரோபஸ்டிகம் என்னும் களைச்செடி மஞ்சள் நிற பூக்கள் உடன் நீலகிரி மாவட்டம் முழுவதிலும் ஆக்கிரமித்து வருகிறது. இதுபோல லேண்டானா கேமரா எனப்படும் உன்னிச் செடியும் நீலகிரி மாவட்டத்தின் தாவர வளங்களை மிக வேகமாக அழித்து பெருகி வருகிறது. விரைவாக இனப்பெருக்கம் செய்யும் புலிகள் இல்லாவிட்டால் மான் இனங்கள் மானாவாரியாக பெருகிவிடும்.
அதுபோல இந்த அந்நிய நாட்டு களைச் செடிகளை உண்ணும் பாக்டீரியாக்கள் நீலகிரி மண்ணில் இல்லை.இதனால், தொட்டபெட்டா தாவர வளமும் விந்து வருகிறது.வனத்துறையினர் தொட்டபெட்டா பகுதியில் உள்ள காப்பு காட்டில் பெருகிவரும் இந்த அந்நிய களைச்செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.தொட்டபெட்டாவின் இயற்கை வளத்தை பாதுகாத்திட வேண்டும்.
அந்நிய செடிகளின் ஆக்கிரமிப்பு தற்போது இயற்கையை ஆர்வலர்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. எனவே, தொட்டபெட்டா மலையில் வளர்ந்துள்ள அந்நிய செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இவ்வாறு ராஜூ கூறியுள்ளார்.
The post அந்நிய களைச் செடிகளால் அழிவை நோக்கி செல்லும் தொட்டபெட்டா சோலை மரக்காடு appeared first on Dinakaran.