நெல்லை-தாம்பரம் சிறப்பு ரயிலுக்கு ரூ.6 கோடி வருமானம்: பண்டிகை காலத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமா?

நெல்லை: நெல்லையில் இருந்து தென்காசி வழியாக தாம்பரத்திற்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயிலுக்கு ரூ.6 கோடியே 63 லட்சம் வருவாய் கிட்டிய நிலையில், வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு இம்மார்க்கத்தில் சிறப்பு ரயில்களை இயக்கிட வேண்டும் என பயணிகள் விரும்புகின்றனர்.நெல்லை – தென்காசி மார்க்கம் அகல ரயில்பாதையாக மாற்றப்பட்டாலும், இன்று வரை அம்மார்க்கத்தில் போதிய ரயில்கள் இயக்கப்படவில்லை. பாலருவி எக்ஸ்பிரஸ் மட்டுமே நள்ளிரவு நேரத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்கப்பட்டு வருகிறது. பயணிகளின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று கடந்த நவம்பர் 7ம்தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு,  தென்னக ரயில்வே சார்பில் நெல்லையிலிருந்து அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி, ராஜபாளையம் வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. அந்த ரயிலுக்கு சிறப்பான வரவேற்பு இருந்தது.அந்த ரயிலுக்கான வருமானம் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை குறித்து சமூக ஆர்வலர் பாண்டியராஜா தகவல் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு தென்னக ரயில்வே அளித்த பதிலில், ‘‘அந்த ரயில் இயக்கியதன் மூலம் மொத்த வருமானம் ரூ.6 கோடியே 63 லட்சத்து 624 எனவும், இதில் நெல்லை ரயில் நிலையத்தில் இருந்து ரூ.1,28,655 தென்காசி ரூ.99,140, ராஜபாளையம் ரூ.85,945, பாவூர்சத்திரம் 49,785, சங்கரன்கோவில் 43,238, சிவகாசி 36,140, அம்பை 35,788, கடையநல்லூர் 24,476, ஸ்ரீவில்லிபுத்தூர் 15,527, கடையம் ரூ.13,519 வருவாய் கிட்டியதாகவும் கூறப்பட்டது. ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் ஏறிய பயணிகள் எண்ணிக்கை அடிப்படையில் நெல்லை 224. தென்காசி 224, ராஜபாளையம் 177, பாவூர்சத்திரம் 118, சங்கரன்கோவில் 110, சிவகாசி 82, அம்பை 81, கடையநல்லூர் 52, ஸ்ரீவில்லிபுத்தூர் 39, கடையம் 39 என தெவிக்கப்பட்டுள்ளது.இதில் பாவூர்சத்திரம் ரயில் நிலையம் பெரிய ரயில் நிலையங்களுக்கு இணையாக 118 பயணிகளுடன் ரூ.50,000 வரை வருமானம் கொடுத்துள்ளது. எனவே தெற்கு ரயில்வேக்கு நல்ல வருவாயை தரும் இவ்வழித்தடத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ‘‘பண்டிகை காலங்களில், அம்பை, கடையம், பாவூர்சத்திரம் சுற்றுவட்டார மக்கள் சென்னைக்கு ரயில்கள் இல்லாத காரணத்தினால் அவதிப்பட்டு வருகின்றனர். ரூ.1500 வரை பேருந்துகளுக்கு கொடுத்து பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.ரயில்களை பிடிக்க மூட்டை, முடிச்சுகளோடு நெல்லை அல்லது தென்காசிக்கு பயணிக்க வேண்டியதுள்ளது. எனவே தீபாவளிக்கு சிறப்பு ரயில் இயக்கியதைப்போல வரும் பண்டிகை காலங்களிலும் இயக்கினால் பயனுள்ளதாக இருக்கும். தற்போது நெல்லையில் காலியாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பிலாஸ்பூர் மற்றும் தாதர் ரயில்களின் காலிப் பெட்டிகளைப் பயன்படுத்தி நெல்லையில் இருந்து அம்பை, தென்காசி வழியாக வாரம் இருமுறை சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும்.’’ என்றனர்….

The post நெல்லை-தாம்பரம் சிறப்பு ரயிலுக்கு ரூ.6 கோடி வருமானம்: பண்டிகை காலத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமா? appeared first on Dinakaran.

Related Stories: