102 கிராம ஊராட்சிகளில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் ₹4.44 கோடி கடனுதவி

கிருஷ்ணகிரி : தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 102 கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த பயனாளிகளுக்கு ₹4.44 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.தமிழக அரசால் உலக வங்கி நிதியுதவியுடன், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டமானது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் மற்றும் பர்கூர் ஆகிய 3 வட்டாரங்களில், 102 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஊரக தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பது மற்றும் அவர்களுக்கு தேவையான நிதி உதவிகளை ஏற்படுத்தி தருவது, தொழில் மற்றும் விவசாயத்தை மேம்படுத்த பயிற்சிகள் வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும். இந்த திட்டத்தின் மூலம் 45 தொழிற்குழுக்களும், 122 உழவர் உற்பத்தியாளர் குழுக்களும் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், இரண்டு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா கால சிறப்பு நிதியாக தனி நபர் தொழில் கடனாக, 3 வட்டாரங்களில் ₹4கோடியே 8 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர்க்கான கடனாக ₹12 லட்சத்து 75ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும் புலம்பெயர்ந்த இளைஞர்களுக்காக கடனாக ₹23 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது சிறப்பு முகாம்கள் மூலமாக, கடன் தொகை திரும்ப வசூலிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு திரும்ப வசூலிக்கப்படும் தொகை, அந்தந்த கிராம ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு, கூட்டமைப்பினை சார்ந்த சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு, திரும்ப நுண் நிறுவன கடன் நிதியாக வழங்கப்பட்டு வருகிறது. தொழில் முனைவோருக்கு மானிய கடனாக, இணை மானிய திட்டம் மூலம் 169 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை இத்திட்டத்தின் மூலம், 57 தொழில்களுக்கான சமுதாய திறன் பள்ளி பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.மேலும், 158 சமுதாய பண்ணை பள்ளி பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம், ஓசூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாகலூர் ஊராட்சியில், இடம் பெயர்வோர் ஆதரவு மையம் நிறுவப்பட்டுள்ளது. இந்த மையத்தை மாவட்ட கலெக்டர் சரயு நேற்று குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

அப்போது, அவர் பேசியதாவது: இடம் பெயர்வோர் ஆதரவு மையம் என்பது, வேலை தேடி வரும் பெண்களுக்கான ஒரு கட்டமைப்பாகும். வேலை தேடி ஓசூர் மாநகராட்சிக்கு வரும் மகளிருக்கு, மற்றும் வேலை கிடைத்து தங்குமிடம் எதிர்பார்க்கும் மகளிருக்கு, 30 நாட்கள் வரை கட்டணமில்லா தங்கும் மகளிர் விடுதியாக, இடம் பெயர்வோர் ஆதரவு மையம் விளங்கும். இம்மையத்தில் 50 நபர்கள் ஒரே நேரத்தில் தங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இம்மையத்தில் கட்டண உணவகம், பல்பொருள் அங்காடி போன்ற வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடம்பெயர்வோர் ஆதரவு மையம் தொடர்பான தகவலுக்கு 9894460626, 8610933233 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், வாழ்ந்து காட்டுவோம் திட்ட உதவி இயக்குநர் மற்றும் மாவட்ட செயல் அலுவலர் ரமேஷ்கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலாஜி, சாந்தலட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்ட பாகலூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

The post 102 கிராம ஊராட்சிகளில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் ₹4.44 கோடி கடனுதவி appeared first on Dinakaran.

Related Stories: