ஸ்ரீவைகுண்டம் : தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி பாசனத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் ஜூன் 15 முதல் செப்.15 வரை கார் சாகுபடியும், வடகிழக்கு பருவமழை காலத்தில் அக்.15 முதல் மார்ச் 31ம் தேதி வரை பிசான சாகுபடியும் மேற்கொள்ளப்படுகிறது. பாபநாசம் அணையில் தண்ணீர் இருப்பை பொறுத்து ஏப்ரல், மே மாதங்களில் அட்வான்ஸ் கார் எனப்படும் பழந்தொழி சாகுபடி முறையும் வழக்கத்தில் இருந்து வருகிறது. ஆனால் நீர் விநியோக முறை, பாசன குளங்களை முறையாக பராமரிக்காதது உள்ளிட்ட காரணங்களால் முப்போக சாகுபடி, ஒரு போக சாகுபடியாக குறைந்து அதற்கும் தண்ணீர் பெறுவதற்கு விவசாயிகள் போராட வேண்டிய சூழல் காணப்படுகிறது.
ஸ்ரீவை. அணை தென்கால் வாய்க்காலில் இருந்து பாசன மேம்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள முதல் குளம் கடம்பா குளமாகும். கடலில் பாதி கடம்பா என்றழைக்கப்படும் அளவிற்கு பெரிய குளமான இக்குளத்தின் கீழ் அம்மன்புரம் குளம், நல்லூர் மேலக்குளம், கீழக்குளம், கானம் குளம், ஆறுமுகநேரி குளம், சீனிமாவடி குளம், மாதா குளம், நாலாயிரமுடையார் குளம், துலுக்கன் குளம், வண்ணார் குளம், ஆவுடையார் குளம், எல்லப்பநாயக்கன் குளம் ஆகிய 12 குளங்கள் உள்ளன.
கடம்பா குளத்தின் நேரடி பாசனம் மூலம் தென்திருப்பேரை கஸ்பா, குருகாட்டூர், புறையூர், ராஜபதி, அங்கமங்கலம், சுகந்தலை போன்ற கிராமங்களில் சுமார் 4,076 எக்டேர் பாசன வசதி பெறுகின்றன. முக்கியத்துவம் வாய்ந்த கடம்பா குளம், தற்போது மண் மேடுகள் ஆக்கிரமிப்பால் தூர்ந்து போய் காட்சியளிக்கிறது. கோடை காலத்தில் கடம்பா குளத்தை தூர்வார வேண்டும் என்ற விவசாயிகளின் எதிர்பார்ப்பு, ஒவ்வொரு ஆண்டும் தீர்க்கப்படாமலேயே இருந்து வருகிறது.
தற்போது கடம்பாகுளம் பாசன விவசாயிகள் தண்ணீருக்காக காத்திருக்கும் நிலையில், குளத்தில் இருந்து வண்டல் மண் அள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கோட்டூர், குருகாட்டூர், மேலகடம்பா உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள நெல் மற்றும் வாழைகள், பாசனத்திற்கு போதிய தண்ணீரின்றி காய்ந்து வருகின்றன. பல இடங்களில் பயிர்கள் கருகத்துவங்கி இருப்பதாக கவலை தெரிவித்துள்ள விவசாயிகள், கடம்பா குளத்திற்கு ஸ்ரீவை.
அணையில் இருந்து தண்ணீரை விரைந்து திறக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளத்தில் பயிர்கள் அனைத்தும் சேதமான நிலையில்,கடன் வாங்கி தற்போது பயிர் செய்துள்ளோம். இந்த பயிர்கள் ஓரளவு செழித்து வளர்ந்து காட்சியளிக்கின்றன. எனவே கடம்பா குளத்திற்கு தண்ணீர் திறந்தால் அதன் மூலம் கடன்களை அடைக்கும் அளவிற்கு பலன் கிடைக்கும், என்றனர்.
The post கருகி வரும் நெற்பயிர், வாழைகளை காப்பாற்ற கடம்பா குளத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் appeared first on Dinakaran.