தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் விஎம்எஸ் நகர் – நிகிலேசன் நகர் இடையில் உள்ள ரயில் பாதையில் புதிதாக ரயில்வே கேட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன்பெரியசாமி தலைமை வகித்தார்.
துணை ஆணையர் ராஜாராம், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாலை வசதி, கால்வாய், மின்விளக்கு, வீட்டுத்தீர்வை, தண்ணீர் தீர்வையில் பெயர் மாற்றம், வீடு கட்டுவதற்கு அனுமதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மச்சாதுநகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் கிருஷ்ணன், கவுன்சிலர் செபஸ்டின்சுதா உள்பட பலர் மனுக்கள் அளித்தனர். இதில் உடனடியாக தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கான உத்தரவை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.
பின்னர் அவர் கூறியதாவது: தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் கடந்த மாதம் முதல் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மூலம் 500க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு உள்ளது. மாநகரில் கடந்த 3 ஆண்டுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. புதிதாக 15 பூங்காக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஸ்டேட் பேங்க் காலனி, அமெரிக்கன் மருத்துவமனை சாலை உள்ளிட்ட பல சாலைகள் விரிவுப்படுத்தப்பட்டு உள்ளன. சில சாலைகள் இசிஆர் சாலை வரை சென்று இணைகிறது.
குறிப்பாக சங்கரப்பேரி, மீளவிட்டான், பண்டாரம்பட்டி உள்ளிட்ட புறநகர் பகுதியாக இருந்து மாநகரில் இணைக்கப்பட்ட பிறகு பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்துள்ளோம். 4ம் கேட் பகுதியில் மேம்பாலம் அமைப்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதேபோல் மாநகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் விஎம்எஸ் நகர்- நிகிலேசன் நகர் இடையில் உள்ள ரயில் பாதையில் புதிதாக ரயில்வே கேட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தொழிற்சாலைகள் அதிகம் உள்ள தூத்துக்குடி மாநகரில் மாசுவை குறைப்பதற்காக தொடர்ந்து மரங்கள் நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே 70 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ள நிலையில் தற்போது 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
தருவைகுளம் பகுதியில் குப்பைக்கிடங்கில் 525 ஏக்கர் பரப்பளவில் மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்படுகிறது. இதற்கு மாநகரில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுவதால் கழிவுநீர் நேரடியாக கடலுக்கு செல்வது தவிர்க்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழையின்போது மாநகரில் தண்ணீர் தேங்காதவாறு மழைநீர் வடிகால் உள்ளிட்ட அனைத்து வகையான நீர்வழித்தடங்களும் சீரமைக்கப்பட்டு உள்ளது, என்றார்.
இதில் உதவி ஆணையர் (பொ) நரசிம்மன், மாநகராட்சி நகர்நல அலுவலர் வினோத்ராஜா, உதவி செயற்பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் பிரின்ஸ் ராஜேந்திரன், நகர அமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளர் ராமசந்திரன், சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டி, மாநகராட்சி மண்டல தலைவர் நிர்மல்ராஜ், பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், கணக்கு குழு தலைவர் ரெங்கசாமி, கவுன்சிலர்கள் ஜாக்குலின்ஜெயா, பவாணி, செபஸ்டின் சுதா, சுப்புலட்சுமி, காந்திமதி, நாகேஸ்வரி, கற்பகக்கனி, தெய்வேந்திரன், அந்தோணி பிரகாஷ் மார்ஷலின், பகுதி இளைஞரணி அமைப்பாளர்கள் எமல்டன், வேல்முருகன், காங்கிரஸ் மண்டல தலைவர் சேகர், வட்ட பிரதிநிதி மார்ஷல், போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பர் ஞானமார்ட்டின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post தூத்துக்குடி மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் விஎம்எஸ் நகர் – நிகிலேசன் நகர் இடையே புதிய ரயில்வே கேட் அமைக்க நடவடிக்கை appeared first on Dinakaran.