அண்ணாமலை அப்டேட் ஆகட்டும் ராமரை கைவிட்டு ஜெய் ஜெகநாத்துக்கு மாறிவிட்டார் மோடி: அமைச்சர் சிவசங்கர் பதிலடி

கடலூர்: ‘பிரதமர் மோடியே ராமரை கைவிட்டு விட்டு, ஜெய் ஜெகநாத் என கூற ஆரம்பித்துவிட்டார். பாஜ தலைவர் அண்ணாமலை அப்டேட் ஆகட்டும்’ என அமைச்சர் சிவசங்கர் கூறினார். கடலூர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணைக்காக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று ஆஜரானார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, பணப்பலன் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக இம்மாத இறுதியில் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

சென்னையில் இயக்கப்பட்டுள்ள தாழ்தள பேருந்துகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து மற்ற மாநகராட்சிகளிலும் இயக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்றார். தொடர்ந்து, 2026 தேர்தலுக்கு முன்பாக முதல்வர் ஸ்டாலினே ‘ஜெய்ஸ்ரீராம்’ சொல்வார், என பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கூறி உள்ளாரே என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அமைச்சர், ‘பிரதமர் மோடியே இதுவரை கூறிவந்த ‘ஜெய் ஸ்ரீராம்’ என ராமரை கைவிட்டு, கட்சி மாறி ‘ஜெய் ஜெகநாத்’ என கூற ஆரம்பித்துவிட்டார். எனவே பாஜ தலைவர் அண்ணாமலை அப்டேட் ஆகட்டும், அதன் பிறகு பார்க்கலாம்’ என்றார்.

*‘ஸ்டாலின் வாழ்க’ என அண்ணாமலை சொல்லும் காலம் வரும்- அமைச்சர் மு.பெ.சாமிநாதன்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியின் கீழ் இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் நாட்டின் முன்னோடியான பல்வேறு சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றதை போலவே வருகிற சட்டமன்ற தேர்தலிலும் திமுக மிகப்பெரிய வெற்றியை பெரும். அப்போது திராவிட மாடல் ஆட்சியின் தளபதி ஸ்டாலின் வாழ்க என அண்ணாமலையே சொல்லும் காலம் வரும். இவ்வாறு அவர் கூறினார்.

The post அண்ணாமலை அப்டேட் ஆகட்டும் ராமரை கைவிட்டு ஜெய் ஜெகநாத்துக்கு மாறிவிட்டார் மோடி: அமைச்சர் சிவசங்கர் பதிலடி appeared first on Dinakaran.

Related Stories: