அசாதாரண சூழலை தொடர்ந்து ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, நாட்டை விட்டு தப்பி ஓடி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். ஹசீனா ஆட்சி கவிழ்ந்ததைத் தொடர்ந்து, ராணுவம் ஆட்சிப் பொறுப்பேற்றது. அதோடு, நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி முகமது சஹாபுதீன் உத்தரவிட்டார். புதிய தேர்தல் நடக்கும் வரை பொருளாதார நிபுணரும் நோபல் பரிசு வென்றவருமான முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்க வேண்டுமென்ற மாணவர் அமைப்பினர் கோரிக்கையை ஜனாதிபதியும், ராணுவமும் ஏற்றுக் கொண்டது.
இதைத் தொடர்ந்து, பாரிசில் இருந்த முகமது யூனுஸ் நேற்று பிற்பகல் 2.10 மணி அளவில் வங்கதேசம் திரும்பினார். டாக்கா விமான நிலையத்தில் யூனுசுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பேட்டி அளித்த யூனுஸ், ‘‘இன்று நமது பெருமைமிகு நாள். நாம் 2வது முறையாக சுதந்திரம் பெற்றுள்ளோம். இந்த சுதந்திரத்தை நாம் பாதுகாக்க வேண்டும். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கூடிய அரசை நாம் அமைக்க வேண்டும். போராட்டக்காரர்கள் ஏற்படுத்திய குழப்பத்தில் இருந்து நாட்டையும் மக்களையும் காக்க வேண்டும். நீங்கள் என்மீது நம்பிக்கை கொண்டிருப்பது உண்மையானால், யார் மீது தாக்குதல் நடத்தாதீர்கள்.
இதுதான் நமது முதல் பொறுப்பு. நாடு இப்போது நம் கையில் இருக்கிறது. அதை நாம் மறுகட்டமைக்க வேண்டும்’’ என்றார். இதைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு இடைக்கால அரசு பதவியேற்பு விழா நடந்தது. இதில், இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் பொறுப்பேற்றார். அவருக்கு ஜனாதிபதி முகமது சஹாபுதீன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் இடைக்கால அரசின் உறுப்பினர்களாக 15 பேர் பதவியேற்றனர். இதன் மூலம் கடந்த இரு தினங்களாக நிலவிய அரசியல் குழப்பத்திற்கு தற்காலிக தீர்வு கிடைத்துள்ளது. இடைக்கால அரசு குறிப்பிட்ட காலத்திற்கு அரசு நிர்வாகத்தை கவனிக்கும் என்றும், பொதுத்தேர்தலை மேற்பார்வையிட்டு புதிய அரசு அமைவதற்கான பணிகளை செய்யும் என்றும் ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
ஹசீனா மீண்டும் வருவார்
* ஹசீனா ஆட்சி கவிழ்ந்த பிறகு நடந்த வன்முறை போராட்டங்களில் மட்டும் 232 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 23 நாட்களாக நடந்த போராட்டத்தில் மொத்தம் 560 உயிர்கள் பலியாகி உள்ளன.
* வங்கதேசத்தில் மீண்டும் ஜனநாயகம் மீட்கப்பட்ட பிறகு ஹசீனா நாடு திரும்புவார் என அவரது மகன் சஜீப் தெரிவித்துள்ளார்.
* கலவரம் காரணமாக சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த நிலையில், நேற்று முதல் போலீசார் மீண்டும் பணிக்கு வரத் தொடங்கினர். இதனால் ஓரிரு நாளில் வங்கதேசத்தில் இயல்பு நிலை திரும்பும் என ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
* வன்முறை பீதி அடங்காத நிலையில் இரவில் திருட்டு நடந்து விடுமோ, கொள்ளையர்கள் வந்து விடுவார்களோ என அச்சத்திலேயே தூங்க முடியாமல் தவிப்பதாக வங்கதேச மக்கள் கூறுகின்றனர்.
* ஹசீனா இந்தியாவை விட்டு வெளியேறுவது தொடர்பாக எந்த தகவலும் இப்போதைக்கு இல்லை என இந்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஜெய்ஸ்வால் கூறி உள்ளார்.
The post வங்கதேசத்தில் அசாதாரண சூழலில் இடைக்கால அரசின் தலைவராக பொறுப்பேற்றார் முகமது யூனுஸ்: பாதுகாப்பான அரசை வழங்குவதாக வாக்குறுதி appeared first on Dinakaran.