தேனி ரயில்வே மேம்பால பணியை விரைவுபடுத்த வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை


தேனி: தேனியில் மதுரை சாலையில் நடந்து வரும் ரயில்வே மேம்பாலப் பணியினை விரைவுபடுத்திட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த 1997ம் ஆண்டு நிர்வாக வசதிக்காக மதுரை மாவட்டத்தில் இருந்து பிரித்து தேனியை தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் உருவானது. தேனி தலைநகரான கடந்த 27 ஆண்டுகளில், தேனி நகரானது அபரிமிதமான வளர்ச்சி பெற்றுள்ளது. பெருநகரத்திற்கு இணையாக மெட்ரிக், பப்ளிக் பள்ளிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், சட்டக்கல்லூரிகள், கால்நடை பல்கலைக்கழகம் என கல்வியிலும், பல்நோக்கு மருத்துவமனைகள், கார்பரேட் நிறுவனங்களான வர்த்தக நிறுவனங்கள் தேனி நகரில் அமைத்துள்ளன.

இதன் காரணமாக தேனி நகரில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவகூடங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவியர் தேனிக்கு நாள்தோறும் சென்று வருகின்றனர். மேலும் பல்வேறு காரணங்களுக்காக தேனிக்கு நாள்தோறும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரணக்கானோர் பேருந்துகள் மற்றும் கார், வேன், டூவீலர்களில் தேனிக்கு வந்து செல்கின்றனர். இதன் காரணமாக தேனி நகரானது மக்கள்தொகை பெருக்கத்தால் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. தேனி நகரானது பெருவளர்ச்சி அடைந்திருந்தாலும், தேனி நகரின் முக்கிய சாலைகளாக கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பிருந்த தேனி நகர் பெரியகுளம் சாலை, மதுரை சாலை, கம்பம் சாலைகள் மட்டுமே பிரதான சாலைகளாக இருந்து வருகிறது.

இதில் நகரின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஏற்படுத்தப்பட்ட திட்டச்சாலைகளும் முழுமையான செயல்பாட்டுக்கு வராமல் அரைகுறையாகவே உள்ளதால் தேனி நகரில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் போடியில் இருந்து மதுரைக்கும், போடியில் இருந்து சென்னைக்குமாக பயணிகள் ரயில் கடந்த 2 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தேனி நகரில் பெரியகுளம் சாலை, பாரஸ்ட் ரோடு, அரண்மனைப்புதூர் விலக்கு ஆகிய பகுதிகளில் ரயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது. ரயில்கள் வந்து செல்லும்போதெல்லாம் ரயில்வே கேட் மூடப்படுவதால் தேனி நகரில் இருந்து போக்குவரத்து வாகனங்கள் செல்ல வேறு வழியில்லாததால் ரயில்வே கேட்டுகளின் அருகே நீண்ட நேரம் வாகனங்கள் நீணட தூரத்திற்கு அணிவகுத்து நிற்க வேண்டிய அவலம் நீடித்து வருகிறது.

இதில் தேனி நகர் மதுரை சாலையின் வழியாக தேனி அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியுள்ளதால் ரயில்வே கேட் மூடப்படம் நேரங்களில் வாகனங்கள் காத்திருக்க வேண்டியநிலை உள்ளது. 108 ஆம்புலன்ஸ்கள் கூட நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய கட்டாய அவலம் நீடித்து வருகிறது. எனவே, முதற்கட்டமாக தேனியில் அரண்மனைப்புதூர் விலக்கு அருகே உள்ள ரயில்வே கேட் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் சுமார் ரூ.80 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கப்பட்டது. இப்பணிகள் ஓராண்டு காலத்திற்குள் முடிக்கப்படும் என நெடுஞ்சாலைத் துறை அறிவித்திருந்தது.

ஆனால், பணிகள் துவங்கி 2 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தற்போது வரை மதுரை சாலை ரயில்வே கேட்டின் மேற்கு புறம் அரண்மனைப்புதூர் விலக்கு பகுதியில் இருந்து தேனி நகர் செல்லும் சாலையில் ஒருபுறம் ரயில்வே மேம்பாலம் அமைக்க தேவையான தூண்கள் அமைக்கப்பட்டு அதன்மேல் கர்டர்கள் பொருத்தப்பட்டு கான்கிரீட் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், ரயில்வே கேட்டின் கிழக்கு புறம் தேனி புதிய பஸ்நிலைய பிரிவு முதல் மதுரை சாலையில் எல்.எஸ் மில் வரை மேம்பாலம் அமைக்கத் தேவையான தூண்கள் இதுவரை முழுமையாக அமைக்கப்படாமலும், அமைக்கப்பட்ட தூண்களின் மீது கர்டர் பொருத்தாமலும் ரயில்வே கேட்டின் கிழக்கு புறம் போக்குவரத்து வாகனங்கள் செல்ல தடைவிதித்து சாலையின் நடுவே பள்ளம் தோண்டி தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக போடி, கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மதுரை நோக்கி செல்ல வேண்டிய வாகனங்கள் மதுரை ரோட்டின் ரயில்வே கேட்டை கடந்து புதிய பஸ் நிலையம் வழியாக கலெக்டர் அலுவலகம் செல்லும் மிகக் குறுகிய திட்டச்சாலை வழியாக அரசு ஐடிஐ அருகே உள்ள மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸ் வானங்கள் உள்ளிட்ட வாகனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. புதிய பஸ்நிலையத்தின் திட்டச்சாலை வழியாக மதுரை வழித்தடத்தில் செல்லக்கூடிய வாகனங்கள் குறுகிய புதிய பஸ்நிலைய திட்டச்சாலையில் செல்லும்போது வாகன நெரிசல் ஏற்பட்டு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் தேனியில் இருந்து மதுரை சாலையில் அரண்மனைப்புதூர் விலக்கு அருகே அமைக்கப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலப் பணியினை விரைவு படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

The post தேனி ரயில்வே மேம்பால பணியை விரைவுபடுத்த வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: