100 நாள் வேலை கேட்டு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

திருப்பூர் : 100 நாள் வேலை கேட்டு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் கம்மாளகுட்டை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்படி கடந்த 5 மாதங்களாக பயனாளிகளுக்கு வேலை அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து கடந்த மாதம் 8ம் தேதி நடைபெற்ற மனு கொடுக்கும் போராட்டத்தின்போது ஊத்துக்குளி வட்டார வளர்ச்சி அலுவலர் அனைத்து பஞ்சாயத்துகளிலும் விரைவில் வேலை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்திருந்தார்.

ஆனால், வேலை வழங்காததால் நேற்றைய தினம் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கம்மாளகுட்டை ஊராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, விவசாய சங்கம் மற்றும் தொழிலாளர்களிடையே ஊத்துக்குளி வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன் மற்றும் குன்னத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுசீலா பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும், ஒரு வார காலத்திற்குள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட வேலை அட்டை வைத்தவர்களுக்கு நிர்வாக அனுமதி பெற்று பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கை மனுவை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வழங்கினர். இந்த போராட்டத்தில் இந்திய விவசாய தொழிலாளர் சங்க தாலுகா தலைவர் மணியன், தாலுகா செயலாளர் பிரகாஷ், கம்மாளக்குட்டை ஊராட்சி வார்டு உறுப்பினர் ராஜா பரத் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.

The post 100 நாள் வேலை கேட்டு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: