சென்னை: ஜவுளித்துறையை காப்பாற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்த்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; செமி கண்டக்டர் தயாரிப்பில் சீனா மற்றும் தைவான் நாடுகள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள நிலையில், இந்தியாவில் செமி கண்டக்டர் தயாரிப்பதற்கான தொழிற்சாலைகள் அமைப்பதற்கான முன்னெடுப்புகளை மத்திய அரசு ஊக்குவித்தபோது, எனது தலைமையிலான அம்மாவின் அரசு திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குநேரி மற்றும் ஓசூரில் செமி கண்டக்டர் பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கைளை மேற்கொண்டோம்.
ஆனால், அரசு இதில் முணைப்பு காட்டாததன் காரணமாக செமி கண்டக்டர் தொழிற்சாலைகள் அசாம் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களுக்குச் சென்றுவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் கடந்த ஜூலை மாதம் கடைசி வாரத்தில் மத்தியப் பிரதேச முதலமைச்சர், கோவை மற்றும் திருப்பூருக்கு நேரடியாக வருகை தந்து, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் (TEA), தென்னிந்திய ஆலைகள் சங்கம் (SIMA) மற்றும் இந்திய பருத்தி கூட்டமைப்பு (ICF) ஆகியவற்றுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார். இதனால், உள் மாநில ஜவுளி முதலீடுகள் வெளி மாநிலங்களுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்குச் செல்லும் தமிழக தொழில் நிறுவனங்கள், இங்கேயே தொழில் துவங்குவதற்குத் தேவையான சூழ்நிலையை உருவாக்குவதோடு; தென்னிந்தியாவின் மான்செஸ்டர் ‘கோயம்புத்தூர்’ என்ற பெயரை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளும் வகையில் டெக்ஸ்டைல் துறையினைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
The post ஜவுளித்துறையை காப்பாற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி கோரிக்கை appeared first on Dinakaran.