மக்களைத் தேடி மருத்துவம் 4ம் ஆண்டு தொடக்க விழா: கலெக்டர் பங்கேற்பு

 

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்களைத் தேடி மருத்துவம் 4ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட சுகாதார அலுவலர்கள் (திருவள்ளூர்) ப.பிரியாராஜ், (பூந்தமல்லி) பிரபாகரன், ஆவடி மாநகர நகர் நல அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கி பேசினார். அப்போது கலெக்டர் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சரின் கடைக்கோடி மக்களின் கதவுகளையும் தட்டிய உன்னதமான திட்டமான மக்களைத் தேடி மருத்துவம் நான்காம் ஆண்டு தொடக்க விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்த மக்கள் தொகை 27,51,656. இந்த மக்கள் தொகையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 20,85,756. இதில் 20,65,600 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இப்ப பரிசோதனையில் 2,44,522 பேருக்கு ரத்த அழுத்தமும், 1,41,861 பேருக்கு சர்க்கரை நோயும், 1,28,581 பேருக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு சிறப்பாக சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

தொடர்ந்து 14 வட்டாரங்கள் மற்றும் ஆவடி மாநகராட்சியில் மக்களைத் தேடி மருத்துவத்தில் சிறப்பாக பணிபுரிந்த பெண் சுகாதார தன்னார்வலர்கள், இடைநிலை சுகாதார பணியாளர்கள், எம்டிஎம் சுகாதார ஆய்வாளர்கள், இயன் முறை மருத்துவர்கள், மருத்துவ அலுவலர்கள் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர்கள் அனைவருக்கும் மாவட்ட கலெக்டர் பாராட்டு சான்றிதழும் கேடயமும் வழங்கினார். முன்னதாக மக்களைத் தேடி மருத்துவ வாகனத்தினை கலெக்டர் பார்வையிட்டார்.

The post மக்களைத் தேடி மருத்துவம் 4ம் ஆண்டு தொடக்க விழா: கலெக்டர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: