கடந்த மாதம் தடை செய்யப்பட்ட வலைகளை கொண்டு விசைப்படகில் மீன்பிடித்த 41 மீனவர்களை பழவேற்காடு மீனவர்கள் சிறை பிடித்து அதிகாரிகள் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் அவர்கள் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று மீண்டும் விசைப்படகு ஒன்று தடை செய்யப்பட்ட வலைகளை கொண்டு மீன்பிடிப்பதாக கிடைத்த தகவலின்படி, 50க்கும் மேற்பட்ட படகுகளில் சென்ற பழவேற்காடு மீனவர்கள் அந்த விசைப்படகை சுற்றி வளைத்து அவர்களை தட்டிக்கேட்டுள்ளனர்.
தங்களது எல்லையில் தடை செய்யப்பட்ட வலைகளை கொண்டு மீன்பிடிப்பதால் பழவேற்காடு மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி கேள்வி எழுப்பினர். அப்போது, அவர்கள் புதுச்சேரியை சேர்ந்த மீனவர்கள் என தெரிய வந்தது. இதையடுத்து, பழவேற்காடு மற்றும் புதுச்சேரி மீனவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் துடுப்பு, ராடு, உருட்டுக்கட்டை கொண்டு புதுச்சேரி மீனவர்கள் தாக்கினர். இதில் பழவேற்காடு மீனவர்கள் லோகேஷ், பிரதாப் ஆகிய இரு மீனவர்கள் காயமடைந்தனர்.
அவர்கள் பழவேற்காடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். வெளி மாவட்ட மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை கொண்டு மீன் பிடிப்பதையும் அதை தட்டிக்கேட்ட இரண்டு மீனவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் பழவேற்காட்டில் கடைகள் அடைக்கப்பட்டது. மேலும், பழவேற்காடு பசியாவரம் மேம்பாலம் அருகே சாலையில் அமர்ந்து மீனவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
பிற மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் தங்களது எல்லையில் மீன்பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன், மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், பிரச்னை தொடர்பாக காவல்துறையில் அளிக்கும் புகாரின் பேரில் சட்டரீதியாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக, உரிய நடவடிக்கை எடுப்பதாக மீன்வளத்துறை இணை இயக்குனர் சந்திரா உத்தரவாதம் அளித்தார். மேலும் மீன்வளத்துறை, காவல்துறை, கடலோர காவல் குழுமம் இணைந்து மீனவர்களுடன் சென்று கடலில் ரோந்து பணியில் ஈடுபடுவதாகவும் அதிகாரிகள் ஒப்புதல் அளித்தனர். இதை தொடர்ந்து, சுமார் 3 மணி நேரம் நடந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மீனவர்கள் போராட்டம் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
The post தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்திய பிரச்னை புதுச்சேரி -பழவேற்காட்டு மீனவர்கள் திடீர் மோதல்: இரு மீனவர்கள் காயம், கடையடைப்பு, மறியல் appeared first on Dinakaran.