×

ஒரு விநாடியில் 5,000ல் ஒரு பங்கு முன்னதாக வந்து ஒலிம்பிக் தங்கம் வென்றார் லைல்ஸ்: 100 மீட்டர் ஓட்டத்தில் அசத்தல்

ஒலிம்பிக் என்றாலே… உலகின் அதிவேக வீரர் யார் என்பதை தீர்மானிக்கும் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தின் மீதுதான் அதிக கவனம் இருக்கும். ஜெஸ்ஸி ஓவன்ஸ், கார்ல் லூயிஸ், உசைன் போல்ட் (ஹாட்ரிக் சாம்பியன்), ஜஸ்டின் காட்லின், பென் ஜான்சன், லின்போர்டு கிறிஸ்டி, டோனோவன் பெய்லி போன்ற நட்சத்திரங்கள் முத்திரை பதித்த பந்தயம் இது. அதிலும் ஜமைக்கா வீரர் போல்ட் படைத்த சாதனைகள் ஈடு இணையற்றவை. வழக்கம் போலவே பாரிஸ் ஒலிம்பிக்கிலும் போட்டி மிகக் கடுமையாக இருந்தது.

மிகுந்த பரபரப்பு + எதிர்பார்ப்புக்கிடையே பைனலில் பங்கேற்ற வீரர்கள் மின்னல் வேகத்தில் பாய்ந்தோடி இலக்கை நெருங்கிய நிலையில், வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிக்க முடியாத அளவுக்கு அத்தனை வீரர்களும் நேர்கோட்டில் அணிவகுத்தனர். 8 வீரர்களும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் ஓடி பதக்க வேட்டையாடினர். வீடியோ பதிவை மிக நுணுக்கமாக ஆய்வு செய்த நடுவர்கள் நீண்ட நேர தாமதத்துக்குப் பின்னர், அமெரிக்க வீரர் நோவா லைல்ஸ் போட்டோஃபினிஷில் தங்கப் பதக்கம் வென்றதாக அறிவித்தனர். லைல்ஸ் 9.79 (.784) விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து முதலிடம் பிடித்தார். ஜமைக்காவின் கிஷேன் தாம்சன் 9.79 (.789) வெள்ளிப் பதக்கமும், அமெரிக்காவின் ஃபிரெட் கெர்லி (9.81) வெண்கலமும் வென்றனர்.

லைல்ஸ் – தாம்சன் இடையேயான வித்தியாசம் ஒரு விநாடியில் 5,000ல் ஒரு பங்கு (0.005 விநாடி!) மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக வந்த 6 பேரும் கூட லைல்ஸ் பதிவு செய்த நேரத்தை விட 0.12 விநாடி மட்டுமே பின்தங்கினர். ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டப் பந்தய வரலாற்றில் இத்தனை கடுமையான போட்டி இதுவரை இருந்ததில்லை என்று 4 முறை சாம்பியனான மைக்கேல் ஜான்சன் வியப்பு தெரிவித்துள்ளார். எனினும், 100 மீட்டர் ஓட்டத்தில் உசைன் போல்ட்டின் உலக சாதனை (9.58 விநாடி) மற்றும் ஒலிம்பிக் சாதனை (9.63 விநாடி) முறியடிக்க முடியாத இலக்காக நீடிக்கிறது.

The post ஒரு விநாடியில் 5,000ல் ஒரு பங்கு முன்னதாக வந்து ஒலிம்பிக் தங்கம் வென்றார் லைல்ஸ்: 100 மீட்டர் ஓட்டத்தில் அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Lyles ,Olympic ,Olympics… ,Jesse Owens ,Carl Lewis ,Usain Bolt ,Justin Gatlin ,Ben Johnson ,Linford Christie ,Dinakaran ,
× RELATED வினேஷ் போகத் ஒலிம்பிக்கில் தோல்வி;...