×

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி இந்தியாவுக்கு 2வது வெற்றி: ஜப்பானுக்கு எதிராக கோல் மழை

ஹூலுன்பியர்: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டித் தொடரில், ஜப்பான் அணியுடன் மோதிய இந்தியா 5-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடைபெறும் இந்த தொடரின் 2வது நாளான நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் பாகிஸ்தான், கொரியா அணிகள் மோதின. அந்த போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இந்த அணிகள் முதல் நாள் மோதிய ஆட்டங்களும் டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் 2-2 என்ற கோல் கணக்கில் மலேசியாவுடனும், கொரியா 5-5 என்ற கோல் கணக்கில் ஜப்பானுடனும் டிரா செய்தன. முதல் நாளில் இந்தியா மட்டுமே 3-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தியது. இந்நிலையில் இந்தியா தனது 2வது ஆட்டத்தில் நேற்று ஜப்பான் அணியுடன் மோதியது. வழக்கம் போல் அதிரடியாக விளையாடிய ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணிக்கு, 2வது நிமிடத்தில் சுக்ஜித் சிங் அபாரமாக கோலடித்து கணக்கை தொடங்கி வைத்தார்.

3வது நிமிடத்தில் அபிஷேக் கோல் அடிக்க இந்தியா 2-0 என முன்னிைலையை அதிகரித்தது. 17வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி இந்திய வீரர் சஞ்ஜெய் கோல் போட்டார். ஜப்பானின் அரிதான கோல் முயற்சிகள் பலனளிக்கவில்லை. இடைவேளையின்போது இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் வலுவான நிலையில் இருந்தது.2வது பாதியில் ஜப்பானின் கசுமசா மட்சுமோட்டோ கோலடித்து (41வது நிமிடம்) அந்த அணிக்கு ஆறுதல் அளித்தார். ஆட்டம் முடிய 4 நிமிடங்கள் இருந்த போது இந்திய வீரர்கள் உத்தம் சிங், சுக்ஜீத் சிங் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினர். விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் இந்தியா 5-1 என்ற கோல் கணக்கில் தொடர்ச்சியாக 2வது வெற்றியை பெற்றது. இந்தியா தனது 3வது லீக் ஆட்டத்தில் நாளை மலேசியா அணியுடன் மோதுகிறது.

 

The post ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி இந்தியாவுக்கு 2வது வெற்றி: ஜப்பானுக்கு எதிராக கோல் மழை appeared first on Dinakaran.

Tags : Asian Champions Trophy Hockey ,India ,Japan ,Hulunbier ,Hulunbier, China ,Dinakaran ,
× RELATED ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: பைனலுக்கு முன்னேறியது இந்தியா