×

நெல்லை மாநகராட்சி புதிய மேயர் வேட்பாளர் ராமகிருஷ்ணன்: அமைச்சர்கள் நேரு, தங்கம் தென்னரசு அறிவிப்பு

நெல்லை: நெல்லை மாநகராட்சி புதிய மேயர் வேட்பாளராக ராமகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். 55 வார்டுகளை கொண்ட நெல்லை மாநகராட்சியில் திமுக 44, அதிமுக 4, காங்கிரஸ் 3, மதிமுக, முஸ்லீம் லீக், மார்க்சிஸ்ட், மமக ஆகிய கட்சிகளை சேர்ந்த ஒரு கவுன்சிலரும் சேர்த்து மொத்தம் 55 கவுன்சிலர்கள் உள்ளனர். நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த பி.எம்.சரவணனுக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே சுமூக உறவு இல்லாததால், மாநகராட்சி கூட்டங்களை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து கடந்த ஜூலை 3ம் தேதியன்று மேயர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, தற்போது பொறுப்பு மேயராக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் நெல்லை வண்ணார்பேட்டையில் தனியார் தங்கும் விடுதியில் உள்ள மண்டபத்தில் வைத்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.என்.நேரு உள்ளிட்டோர் தலைமையில் மாநகராட்சி கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடத்தப்பட்டது.

இதில் நெல்லை மாநகராட்சியின் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்படி மேயர் வேட்பாளராக 25வது வார்டு உறுப்பினரான கிட்டு என்ற ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து மேயர் வேட்பாளரான ராமகிருஷ்ணனை அமைச்சர்கள் நேரு, தங்கம் தென்னரசு அறிமுகம் செய்தனர். பின்னர் கூட்டாக அமைச்சர்கள் நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர் நிருபர்களிடம், நெல்லை மாநகராட்சி மேயர் வேட்பாளராக ராமகிருஷ்ணன் போட்டியிடுகிறார்’’ என்று தெரிவித்தனர். புதிய மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராமகிருஷ்ணன் (58), இந்து வெள்ளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். டவுன் வேணுவன குமாரர் கோயில் தெருவில் வசிக்கும் இவருக்கு காந்தீஸ்வரி என்ற மனைவியும், மகாராஜன் என்ற மகனும் உள்ளனர்.

 

The post நெல்லை மாநகராட்சி புதிய மேயர் வேட்பாளர் ராமகிருஷ்ணன்: அமைச்சர்கள் நேரு, தங்கம் தென்னரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Nellai Municipal Corporation ,Ramakrishnan ,Nehru ,Thangam Tennarasa ,Nellai ,Nellai Corporation ,AIADMK ,Congress 3 ,MDMK ,Muslim League ,Marxist ,Mamaka ,
× RELATED நெல்லை மாவட்டத்தில் 7.11 லட்சம் பேருக்கு...