பழநியில் அனைத்துலக முருகன் மாநாட்டிற்கு கால்கோள் விழா: அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்

பழநி: பழநியில் நடைபெறும் அனைத்துலக முருகன் மாநாட்டிற்கான கால்கோள் விழாவை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்டம், பழநியில் பழநியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியில் ஆக.24, 25 ஆகிய தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்பட உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெறும் இம்மாநாட்டில் ஆய்வரங்கங்கள், அறுபடை வீடுகளின் அரங்கங்கள், சிறப்பு புகைப்பட கண்காட்சி. வேல் அரங்கம், 3டி தொழில்நுட்பத்துடன் கூடிய காட்சியரங்கம். கலை- இசை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம் போன்றவை இடம் பெறுகின்றன. இம்மாநாட்டில் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து முருக பக்தர்கள், ஆன்மிக பெரியோர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகபெருமானின் பெருமைகளை உலகறியும் வகையில் பறைசாற்றியவர்களை சிறப்பிக்கும் வகையில் 15 முருகனடியார்களின் பெயரில்
விருதுகள் வழங்கப்பட உள்ளது.

வெளிநாட்டினர் 39 பேர் உள்பட 1,300 பேர் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கின்றனர். தவிர, 30க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். மேலும், 4 நீதிபதிகள், 15 ஆதீனங்கள், 30 ஆன்மிக சொற்பொழிவாளர்கள் பங்கேற்கின்றனர். விழா மலர், ஆய்வு கட்டுரை மலர் வெளியிடப்படவுள்ளன. மேலும், முருகன் பெருமையை விளக்கும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், முருகன் புகழை சொல்லும் கும்மி ஆட்டம், கந்தசஷ்டி கவசம் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. மாநாடு காலை 8.30 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடைபெற உள்ளது. மாநாட்டையொட்டி 8 இடங்களில் அலங்கார வரவேற்பு வளைவுகள் அமைக்கப்பட உள்ளது. வழிநெடுகிலும் மாநாட்டு கொடிகள் நடப்பட உள்ளன. சுமார் 8 ஆயிரம் பக்தர்கள் அமர்ந்து பார்வையிடும் வகையில் பந்தல் அமைக்கப்பட உள்ளன. இதற்கான கால்கோள் விழா நேற்று நடந்தது. விழாவை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அறநிலையத்துறை ஆணையர் தர், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி, பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார், வேடசந்தூர் எம்எல்ஏ காந்திராஜன், திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம்உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பழநியில் அனைத்துலக முருகன் மாநாட்டிற்கு கால்கோள் விழா: அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: