×

கூடங்குளம் 3, 4 அணு உலைகளுக்கு புதிய எரிபொருள்; ரஷ்ய நிறுவனம் உற்பத்தியை தொடங்கியது: 18 மாதம் தடங்கலின்றி மின் உற்பத்தி செய்ய முடியும்

நெல்லை: கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் 3, 4 அணு உலைகளுக்கு புதிய எரிபொருள் தயாரிக்கும் பணியை ரஷ்யாவைச் சேர்ந்த நிறுவனம் தொடங்கியது. இதன் மூலம் இனி வரும் காலங்களில் அதிக மின் உற்பத்தி செய்ய முடியும் என்பதோடு எரிபொருள் மாற்றும் பணி ஓராண்டுக்கு பதில் ஒன்றரை ஆண்டுகளாக உயர்கிறது.

நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் இந்தியா – ரஷ்யா கூட்டு முயற்சியுடன் தலா 1000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 1, 2 என இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் முதல் அணு உலையின் மூலம் கடந்த 2013ம் ஆண்டு அக்.22ம் தேதி மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. 2வது அணு உலையின் மூலம் 2016ம் ஆண்டு ஆக.29ம் தேதி மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. இந்த இரண்டு அணு உலைகளும் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து வருகின்றன. இந்த இரண்டு அணு உலைகளின் மூலம் இதுவரை 10 ஆயிரம் கோடி யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இந்த 1, 2 அணு உலைகளில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு அணு உலையை பொறுத்தவரை 163 எரிகோல்கள் பொருத்தப்படும். இதில் மூன்றில் ஒரு பங்கு எரிகோல்கள் ஆண்டுக்கு ஒரு முறை மாற்றப்படும். இதற்காக மின் உற்பத்தி 2 மாதங்களுக்கு மேல் நிறுத்தப்படும். அப்போது பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படும். இதனால் எரிபொருள் மாற்றும் காலங்களில் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டு வந்தது.

இந்த எரிபொருளை இந்தியா – ரஷ்யா செய்து கொண்ட கூட்டு ஒப்பந்தத்தின் படி ரஷ்ய நிறுவனமான ரோஸாடாம் கூடங்குளத்திற்கு சப்ளை செய்து வருகிறது. இந்நிலையில் இந்த எரிபொருளுக்கு மாற்றாக புதிய எரிபொருளை உற்பத்தி செய்யும் பணியை ரஷ்யாவின் ரோஸாடாம் நிறுவனத்தின் ஒரு அங்கமான ‘டிவிஇஎல்’ நிறுவனம் தொடங்கியுள்ளது.

இந்த புதிய எரிபொருள் கூடங்குளத்தில் தற்போது அமைக்கப்பட்டு வரும் தலா 1000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 3, 4 அணு உலைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. 3வது அணு உலையை பொறுத்தவரை உட்புற அணு உலை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. நீராவி என்ஜின்கள், அணு உலை குளிர்விப்பான்கள் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. 4வது அணு உலையை பொறுத்தவரை உட்புற அணு உலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அணு உலை அழுத்த கலன்கள் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. நீராவி ஜெனரேட்டர்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த 3, 4 அணு உலைகளுக்கு ரஷ்யாவின் ரோஸாடாமின் டிவிஇஎல் நிறுவனம் தயாரிக்கும் ‘டிவிஎஸ் – 2எம்’ என்ற புதிய எரிபொருள் சப்ளை செய்யப்பட உள்ளதாக ரோஸாடாம் நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய எரிபொருள் பொருத்துவதன் மூலம் 18 மாதங்களுக்கு ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு எரிகோல்களை மாற்றினால் போதுமானது. இதன் மூலம் மின் உற்பத்தியில் எந்த தடங்கலும் ஏற்படாது. அப்போது கூடுதல் காலங்கள் மின் உற்பத்தி செய்ய முடியும் என நம்பப்படுகிறது.

The post கூடங்குளம் 3, 4 அணு உலைகளுக்கு புதிய எரிபொருள்; ரஷ்ய நிறுவனம் உற்பத்தியை தொடங்கியது: 18 மாதம் தடங்கலின்றி மின் உற்பத்தி செய்ய முடியும் appeared first on Dinakaran.

Tags : Kudankulam ,Nellai ,Dinakaran ,
× RELATED பேரிகார்டில் பைக் மோதி கூடங்குளம் விஞ்ஞானி பலி