தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ.90,041 கோடியாக அதிகரிப்பு: இயக்குநர் சிரஞ்சீவிராஜ் தகவல்

தூத்துக்குடி: தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ.84,300 கோடியில் இருந்து ரூ.90,041 கோடியாக அதிகரித்துள்ளது. தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு 1921ல் துவக்கப்பட்டு, செயல்பட்டு வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 565 கிளைகள், 12 மண்டல அலுவலகங்கள் மூலம் நாட்டின் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் பரந்து விரிந்து செயல்பட்டு 5 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. நேற்று தூத்துக்குடியில் நடந்த இயக்குநர் குழு கூட்டத்தில் முதல் காலாண்டுக்கான நிதிநிலை அறிக்கை முடிவு செய்யப்பட்டு இயக்குநர் சிரஞ்சீவிராஜ் மூலம் அறிவிக்கப்பட்டது.

இது குறித்து வங்கியின் செய்திக்குறிப்பு: வங்கியின் செயல்பாட்டு லாபம் ரூ.380 கோடியில் இருந்து ரூ.469 கோடியாக உயர்ந்துள்ளது. நிகர லாபம் ரூ.261 கோடியில் இருந்து ரூ.287 கோடியாக உயர்ந்துள்ளது. வட்டி வருவாய் ரூ.1156 கோடியில் இருந்து ரூ.1281 கோடியாக மேம்பட்டுள்ளது. வட்டி அல்லாத வருமானம் ரூ.167 கோடியில் இருந்து ரூ.234 கோடியாக உயர்ந்துள்ளது. வங்கியின் மொத்த வருவாய் ரூ.1323 கோடியில் இருந்து ரூ.1515 கோடியாக உயர்ந்துள்ளது. பங்குகளின் மதிப்பு ரூ.454லிருந்து 520 ஆக உயர்ந்துள்ளது. வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ.84,300 கோடியில் இருந்து ரூ.90,041 கோடியாக அதிகரித்துள்ளது. சில்லரை, விவசாய, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் கடன் தொகை 90%லிருந்து 92% ஆக அதிகரித்துள்ளது.

வைப்புத்தொகை ரூ.47,008 கோடியில் இருந்து ரூ.49,188 கோடியாகவும், கடன் தொகை ரூ.37,292 கோடியிலிருந்து ரூ.40,853 கோடி ஆக உயர்ந்து, 10% வளர்ச்சியை எட்டியுள்ளது. நிகர லாபம் ரூ.287 கோடியாக உள்ளது. இதுவும் 10% வளர்ச்சியாகும். நிகர வட்டி வருமானம் ரூ.567 கோடியாக உள்ளது. இதுவும் 10% வளர்ச்சியாகும். சொத்துக்கள் மீதான இலாபமீட்டல் நிலை இந்த காலாண்டில் 14.22% ஆக உள்ளது. நிகரமதிப்பு ரூ.8244 கோடியாக உயர்ந்துள்ளது. இது 15% வளர்ச்சியாகும். வங்கி இந்த காலாண்டில் 10 புதிய கிளைகளை திறந்துள்ளது. இதில் தமிழகத்தில் 6, பிற மாநிலங்களில் 4 கிளைகள் துவக்கியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் போர்ட்டலை துவக்கியுள்ளது. அப்பார்ட்மெண்ட் சேவிங்ஸ் அக்கவுண்ட்ஸ் துவக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் டிமேட் கணக்கு திறக்கும் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. முந்தைய நிதியாண்டின் செயல் திறனுக்காக காலாண்டில் 8 அடல் பென்சன் யோஜனா விருதுகளை பெற்றுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ.90,041 கோடியாக அதிகரிப்பு: இயக்குநர் சிரஞ்சீவிராஜ் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: