போலி பத்திரம் குறித்து விசாரித்து முடிவெடுக்க மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் தரும் சட்டப்பிரிவு சட்டவிரோதமானது: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு பத்திர பதிவு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, போலியான சொத்து பத்திரங்களை மாவட்ட பதிவாளர் செல்லாது என்று அறிவிக்க அதிகாரம் உள்ளது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏராளமானோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஜோதி, ஸ்ரீநாத் ஸ்ரீதேவன், ராஜா கலிபுல்லா, ஆர்.ஸ்ரீனிவாஸ் உள்ளிட்டோர் ஆஜராகினர். மூத்த வழக்கறிஞர் என்.ஜோதி வாதிடும்போது, பத்திரம் போலியானது என்று முடிவுக்கு வர மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் கிடையாது.

நீதி பரிபாலனங்கள் மூலமாக ஒரு பத்திரம் போலியானதா, இல்லையா என முடிவு செய்ய முடியும். இந்த சட்ட பிரிவுகளை ரத்து செய்ய வேண்டும் என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பத்திரம் தொடர்பான விசாரணை குறித்த மாவட்ட பதிவாளர்களின் நோட்டீசை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை இந்த நீதிமன்றம் ஏற்கிறது. மாவட்ட பதிவாளர்களின் நோட்டீசுகள் சட்டவிரோதமானது. எனவே மாவட்ட பதிவாளர்களின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. பத்திரப் பதிவு தொடர்பாக விசாரித்து முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கும் சட்டப் பிரிவு 77 ஏ செல்லாது என்று தீர்ப்பளித்தனர்.

The post போலி பத்திரம் குறித்து விசாரித்து முடிவெடுக்க மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் தரும் சட்டப்பிரிவு சட்டவிரோதமானது: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: