திருவண்ணாமலை, ஆக.2: திருவண்ணாமலையில் நேற்று நடந்த மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாமில், 57 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், வாரந்தோறும் வியாழக்கிழமையன்று, மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது. இந்த முகாமில், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் உதவி உபகரணங்கள் வழங்கவும், அடையாள அட்டைகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதன்படி, வாராந்திர சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது. அதில், அரசு மருத்துவமனையில் பணிபுரியும் சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்று, மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தினர். இந்த முகாமில், 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர். அப்போது, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை, பஸ் பயண சலுகை அட்டை மற்றும் சக்கர நாற்காலி, உதவி உபகரணங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக மனுக்கள் அளித்தனர். மேலும், மருத்துவ குழுவினர் அளித்த பரிந்துரையின் அடிப்படையில், 57 மாற்றுத்திறனாளிகளுக்கு ஒன்றிய அரசின் தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில், உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்நிலையில், மாவட்ட அளவிலான முகாமில் பங்கேற்க மாற்றுத்திறனாளிகளுக்கு சிரமம் ஏற்படுவதை தவிர்க்க, ஊராட்சி அளவில் நடைபெறும் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, அந்த முகாம்களிலும் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (2ம் தேதி) புதுப்பாளையம் எறையூர், வரும் 6ம் தேதி மேற்கு ஆரணி காமக்கூர், 7ம் தேதி போளூர் சந்தவாசல், 8ம் தேதி திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், 9ம் தேதி சேத்தப்பட்டு கிழக்குமேடு செவரப்பூண்டி, 13ம் தேதி பெரணமல்லூர் கொழப்பலூர், 20ம் தேதி ஆரணி முள்ளண்டிபுரம் ஆகிய இடங்களில் முகாம் நடக்கிறது. வரும் 21ம் தேதி அனக்காவூர் மாங்கால் கூட்ரோடு, 22ம் தேதி திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், 23ம் தேதி செய்யாறு கொருக்கை, 29ம் தேதி திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், 30ம் தேதி தெள்ளாறு மேல்பாதி, செப்டம்பர் 3ம் தேதி வெம்பாக்கம் குத்தனூர், 4ம் தேதி, 9ம் தேதி வந்தவாசி ஓசூர் 5ம் தேதி திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவகம் ஆகிய இடங்களில் முகாம் நடைபெறும்.
The post சிறப்பு மருத்துவ முகாமில் 57 பேருக்கு தேசிய அடையாள அட்டை ஊராட்சி அளவிலான முகாமிலும் பங்கேற்க வாய்ப்பு திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நடந்த appeared first on Dinakaran.