காணாமல் போன ஜப்பான் நாட்டு ஆன்மிக சுற்றுலா பயணி மலைப்பகுதியில் தேடுதல் பணி தீவிரம் திருவண்ணாமலையில் கடந்த மே மாதம்

திருவண்ணாமலை, ஆக.2: திருவண்ணாமலையில் கடந்த மே மாதம் காணாமல் போன ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஆன்மிக சுற்றுலா பயணியை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலைக்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆன்மிக சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மற்றும் ஏப்ரல், மே மாதங்களில் வெளி நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை வழக்கத்தைவிட அதிகரித்திருக்கும்.
அதன்படி, கடந்த மே மாதம் 3ம் தேதி ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சடோஷி மினெட்டா(54) என்பவர், ஆன்மிக சுற்றுப் பயணமாக திருவண்ணாமலைக்கு வந்திருந்தார். கிரிவலப்பாதையில் உள்ள ஒரு ஆசிரமத்தில் அவர் தங்கியிருந்தார். இந்நிலையில், ஆசிரமத்தில் இருந்து மலைக்கு சென்று தியானம் செய்யப் போவதாக சொல்லிவிட்டு சென்ற அவர், கடந்த மே 5ம் தேதி முதல் மீண்டும் ஆசிரமத்துக்கு திரும்பவில்லை. எனவே, இது தொடர்பாக ஆசிரமம் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஆனாலும், காணாமல் போன ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில், அவரது விசா காலம் முடிந்த நிலையில், அவரது நிலை குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க ஜப்பான் நாட்டு தூதரகம் கேட்டுக்ெகாண்டுள்ளது. எனவே, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஆன்மிக சுற்றுலா பயணி சடோஷி மினெட்டா குறித்த விபரங்களை கண்டறியும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதையொட்டி, திருவண்ணாமலை தீபமலை பகுதியில் உள்ள ஆசிரமங்கள் உள்ளிட்ட இடங்களிலும், மலையின் பல்வேறு பகுதியில் நேற்று போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவரின் புகைப்படத்தை காண்பித்து, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், ஆட்டோ டிரைவர்கள் உள்ளிட்ட பலரிடமும் விசாரித்தனர். ஆனாலும், அவர் குறித்த எந்த விபரமும் இதுவரை தெரியாததால், போலீசார் குழப்பம் அடைந்துள்ளனர்.

The post காணாமல் போன ஜப்பான் நாட்டு ஆன்மிக சுற்றுலா பயணி மலைப்பகுதியில் தேடுதல் பணி தீவிரம் திருவண்ணாமலையில் கடந்த மே மாதம் appeared first on Dinakaran.

Related Stories: