×

ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் சாலை மறியல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து, கம்யூனிஸ்ட் கட்சிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் நலனுக்கு எதிரான ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கார்த்தி தலைமை தாங்கினார். இதில், மாவட்ட துணை செயலாளர் சீனிவாசன், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி செயலாளர் கமலநாதன், மாவட்ட குழு உறுப்பினர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டடோர் கலந்துகொண்டு, காஞ்சிபுரம் காந்தி ரோடு பெரியார் நினைவு தூண் அருகே இருந்து புறப்பட்டு ஊர்வலமாக சென்று, ஐஓபி வங்கி முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளுக்கு வரி குறைப்பு, உர மானியம் மற்றும் உணவு மானியம் ரத்து, 100 நாள் வேலைவாய்ப்பில் நிதி குறைப்பு, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஒன்றிய பட்ஜெட்டில் நிதி குறைப்பு, விவசாய பணிகள் புறக்கணிப்பு போன்ற ஒன்றிய அரசு நடவடிக்கைகளை கண்டித்து, கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற காஞ்சிபுரம் விஷ்ணுகாஞ்சி போலீசார், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 68 பேர் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து, மாலையில் விடுவித்தனர்.மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

இதனிடையே, காஞ்சிபுரம் அருகே குருவிமலை கூட்டுரோடு பகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் நேரு தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட குழு உறுப்பினர்கள் வசந்தா, சிவப்பிரகாசம், காஞ்சிபுரம் வட்டார செயலாளர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் புயல், மழை, வெள்ள நிவாரணம் தராதது, உணவுப்பொருள் மானியத்தை தர மறுப்பது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாதது, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி, ஒன்றிய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மறியலில் ஈடுபட்டதாக 30 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல, காஞ்சிபுரம் பெரியார் தூண் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டதாக சிஐடியூ அமைப்பின் மாநில செயலாளர் முத்துக்குமார் தலைமையில், 60 பேர் கைது செய்யப்பட்டு, மாலை விடுதலை செய்யப்பட்டனர்.

திருப்போரூர்: ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்தும், தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகை, மெட்ரோ ரயில் திட்ட நிதி ஆகியவற்றை உடனடியாக வழங்க கோரியும், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மாநில அளவில் மறியல் போராட்டம் நேற்று நடைபெற்றது. திருப்போரூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்தில் மா.கம்யூ கட்சியின் திருப்போரூர் ஒன்றிய செயலாளர் செல்வம், இ.கம்யூ கட்சியின் திருப்போரூர் ஒன்றிய செயலாளர் பார்த்தீபன் தலைமையில் 104 பேர் கைது செய்யப்பட்டு, திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

தமிழகத்தை புறம் தள்ளி தமிழக மக்களை வஞ்சிக்கும் வகையில் ஒன்றிய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டை கண்டித்து செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகே இருந்து கம்யூனிஸ்ட் கட்சியினர் செங்கோடியை கையில் ஏந்தியவாறு 100க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்றனர். பேரணியின் இறுதியாக மேலமையூர் இந்தியன் வங்கி முன்பு கொளுத்தும் வெயிலில் சாலையில் அமர்ந்து மத்திய அரசின் தமிழகத்தை புறம்தள்ளி, தமிழக மக்களை பாதிக்கும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷமிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, செங்கல்பட்டு டவுன் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து மாலையில் விடுவித்தனர்.

The post ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Communist ,Union government ,Kanchipuram ,Communist Party of India ,Dinakaran ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவது...