வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியான தமிழர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: தாளவாடியை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 3 பேர் பலி

* தேயிலை தோட்ட பணிக்கு சென்றவர்கள் கதி என்ன?
* எந்த விவரமும் தெரியாததால் உறவினர்கள் கதறல்

கோவை: கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியான தமிழர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. தாளவாடியை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தேயிலை தோட்ட பணிக்கு சென்ற தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கதி என்ன என்று இதுவரை தெரியவில்லை. இதனால் உறவினர்கள் கதறி வருகின்றனர். கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் தமிழ்நாட்டை சேர்ந்த 5க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் பலர் மாயமாகி உள்ளனர். அவர்களை மீட்பு படையினர் தேடி வருகின்றனர். தேனியை பூர்வீகமாக கொண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேரும் பலியானதாகவும், இவர்கள் 40 ஆண்டுகளுக்கு முன்பு வயநாடு சென்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவர்களை பற்றி முழு விவரம் கிடைக்கவில்லை.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதி காமயன்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி (60). இவரது மனைவி புட்டு சித்தம்மா (55). இவர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தாளவாடி மலைப்பகுதியில் இருந்து இடம் பெயர்ந்து கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை பகுதியில் உள்ள எஸ்டேட்டில் வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ள நிலையில் இரண்டு மகள்களை மைசூரில் திருமணம் செய்து கொடுத்து விட்டனர். இருவரும் மகன் மகேசுடன் (22) வசித்து வந்தனர். இந்நிலையில், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இவர்கள் 3 பேரும் உயிரிழந்தனர். இதில், முதலில் அடையாளம் காணப்பட்ட புட்டு சித்தம்மாவின் உடல் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள காமையன்புரம் கிராமத்திற்கு கொண்டு வந்து அடக்கம் செய்யப்பட்டது.

ரங்கசாமியின் உடல் வயநாட்டில் உள்ள மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மகேசின் உடலை மீட்பு குழுவினர் தேடி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நீலகிரி மாவட்டம் தேவாலா பகுதியை சேர்ந்த பிரபாகரன் கூறுகையில், “நீலகிரி மாவட்டம் தேவாலா பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள் 9 பேர் இங்கு வசித்து வந்துள்ளனர். அவர்களில் ஒருவரது உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 8 பேரின் நிலை குறித்து தெரியவில்லை. அவர்களை பற்றி அறிந்துக் கொள்ள அவர்களது உறவினர்கள் தற்போது இங்கு வந்துள்ளனர்’’ என்றார். தேவாலா பகுதியை சேர்ந்த சாந்தகுமார் கூறுகையில்,“எனது மனைவியின் உறவினர்கள் இங்கு வசித்து வந்தனர். தற்போது ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். அவர்களது உடல்களை கேட்டு மேப்பாடி மருத்துவமனைக்கு சென்றோம். அவர்களது முகம் தெரியாத அளவிற்கு சிதைந்துள்ள நிலையில், அவர்கள் அணிந்திருந்த அணிகலன்களை வைத்து அடையாளம் காணும்படி ஊழியர்கள் தெரிவித்தனர்’’ என்றார்.

உயிர் தப்பிய சேலத்தை சேர்ந்த மாரியம்மாள் கூறுகையில், “இரவு வீட்டிற்குள் படுத்திருந்தோம். அப்போது, வீட்டை உலுக்கும் வகையில் பாறைகள் உருண்டு வந்தன. பின், வீட்டிற்குள் தண்ணீரும் சேறும் வந்தது. நாங்கள் எழுந்து பார்த்த போது, வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. அப்போது, எனது மகன் என்னையும் எனது கணவரையும் மீட்டு வேறு பகுதிக்கு கொண்டு சென்றார். இதனால், நாங்கள் உயிர் பிழைத்தோம்’’ என்றார். சந்திரிகா கூறுகையில்,“எனது தம்பி மற்றும் சித்தப்பா ஆகியோரை காணவில்லை. நாங்கள் தேடி வருகிறோம்’’ என்றார். தேயிலை தோட்டத்தில் பணியாற்றி வரும் மூதாட்டி சாந்தி கூறுகையில், “நாங்கள் 40 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். எனது குடும்பத்தில் பேரன், பேத்தி என 9 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அதில், ஒருவர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளார். மீதமுள்ள 8 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை’’ என்றார்.

தமிழ்நாட்டை சேர்ந்த பலர் பல ஆண்டுகளுக்கு முன்பே குடும்பத்துடன் வயநாடுக்கு இடம்பெயர்ந்து அங்குள்ள தேயிலை மற்றும் ஏலக்காய் தோட்டங்களில் பணியாற்றி வந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் முண்டக்கை மற்றும் சூலூர்மலை ஆகிய பகுதிகளிலேயே அதிகம் வசித்து வந்து உள்ளனர். தற்போது ஏற்பட்ட நிலச்சரிவில் மண்ணோடு மண்ணாக சிலர் புதைந்ததாகவும், பலர் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அங்கு ஏராளமான தமிழர்களின் குடும்பத்தினரை பற்றி எந்த விவரமும் தெரியவில்லை. இதனால் தேயிலை தோட்ட பணிக்கு சென்ற பலரின் கதி என்ன என்றே தெரியாமல் உறவினர்கள் கதறி அழுதனர்.

தயார் நிலையில் தமிழக மீட்பு படையினர்
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையின் பேரில் தமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை கோவை மண்டலத்தில் இருந்து 40 வீரர்கள் இணை இயக்குநர் சரவணபெருமாள் தலைமையில் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.மீட்பு பணிக்கு மேலும் பணியாளர்கள் தேவைப்படும் நிலை நிலவுவதால் நெல்லை மண்டலத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி தீயணைப்பு நிலையங்களில் இருந்து 26 வீரர்கள் தூத்துக்குடி மாவட்ட அலுவலர் மனோ பிரசன்னா தலைமையில் போதிய உபகரணங்களுடன் தயார் நிலையில் இருந்து வருகின்றனர். இதேபோல் தமிழகம் முழுவதும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் வயநாடு மீட்பு பணிக்கு செல்ல தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கற்பனையில் கூட நடக்காது
வயநாடு பகுதிகளின் சூழ்நிலை பற்றி மேட்டுப்பாளையம் ஆம்புலன்ஸ் டிரைவர் ஹக்கீம் உருக்கமான வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘‘நாங்கள் இருக்கும் இடத்தில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இங்கு நடந்துள்ள சம்பவம் கற்பனையில் கூட நடக்காது. அந்த அளவிற்கு கொடூரமாக உள்ளது. கார்கள், வீடுகள் என அனைத்தும் புதைந்துள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் மீட்பு பணி தொய்வாக இருந்தாலும், அனைத்து துறையினரும் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

நிலச்சரிவு செய்தி கேட்டு ஊருக்கு திரும்பிய முதியவர்: ரயிலில் இருந்து விழுந்து பலி
அரியலூர் மாவட்டம், குருவாடி தேளூர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (67). இவரது மனைவி லட்சுமி. ஜெயந்தி, வசந்தி என்ற இரு மகள்கள் உள்ளனர். வயநாட்டில் கடந்த 15 ஆண்டுகளாக ராஜமாணிக்கம் கூலி வேலை பார்த்தார். அங்கு நிலச்சரிவு செய்தி கேட்டு சொந்த ஊர் செல்ல முடிவு செய்து கடந்த 31ம்தேதி திரூர்- தஞ்சாவூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஈரோடு வந்தடைந்தார். பின்னர் ஈரோட்டில் இருந்து மைசூர் – மயிலாடுதுறை எக்ஸ்பிரசில் பொது பெட்டியில் பயணம் செய்தார். நேற்று அதிகாலை 3.15 மணிக்கு பெட்டவாய்த்தலை – பெருகமனி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் வந்தபோது, ராஜமாணிக்கம் திடீரென தவறி விழுந்ததில் பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

குன்னூர் திமுக கவுன்சிலர்கள் ஒரு மாத சம்பளம்: நிவாரண நிதிக்கு அளிப்பு
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் இருந்து பலரும் உணவு பொருட்கள், ஆடைகள் மற்றும் பல்வேறு பொருட்களை எடுத்துச் சென்றவாறு உள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு உதவிடும் வகையில் பலரும் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக குன்னூர் நகராட்சி திமுக. கவுன்சிலர்கள் துணைத் தலைவர் வாசிம்ராஜா தலைமையில் 24 பேர் தங்களது ஒரு மாத மதிப்பூதியத்தை (சம்பளம்) வயநாடு மக்களுக்கு நிவாரண உதவியாக வழங்கினர்.

The post வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியான தமிழர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: தாளவாடியை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 3 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: