ராமேஸ்வரம் மீனவர் உயிரிழப்பு: இலங்கை அரசுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம்

டெல்லி: இலங்கை கடற்படை கப்பல் மோதி ராமேஸ்வரம் மீனவர் உயிரிழந்த நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று 397 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். மீனவர்கள் நேற்று நள்ளிரவு நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்களை கைது செய்ய முயன்றுள்ளனர். அப்போது ராமேஸ்வரத்தை சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீது இலங்கை கடற்படை ரோந்து படகு மோதியதில் விசைப்படகு நடுக்கடலில் மூழ்கியது.

இதில் படகில் இருந்த மூக்கையா, மலைச்சாமி, ராமச்சந்திரன், முத்து முனியாண்டி ஆகிய நான்கு மீனவர்கள் மாயமான நிலையில் தற்போது மலைச்சாமியின் உடல் சடலமாக மீட்கப்பட்டு நெடுந்தீவு கடற்கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் கடலில் மூழ்கி மாயமான ஒருவரை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தேடி வரும் நிலையில் படகில் இருந்த மேலும் இருவரை மீட்டு காங்கேசன்துறை போலீசாரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே உயிரிழந்த மீனவரின் உறவினர்கள் மற்றும் காணாமல் போன மீனவர்கள் உறவினர்கள் ராமேஸ்வரம் மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் கண்ணீருடன் காத்திருந்த நிலையில் தனுஷ்கோடி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மீனவர்களின் உறவினர்கள் மற்றும் சக மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இலங்கை கடற்படை கப்பல் மோதி ராமேஸ்வரம் மீனவர் உயிரிழந்த நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள இலங்கை தூதரை அழைத்து வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

The post ராமேஸ்வரம் மீனவர் உயிரிழப்பு: இலங்கை அரசுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: