அம்ரூத் திட்ட குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணியில் அலட்சியம்

பள்ளிபாளையம், ஆக.1: பள்ளிபாளையம் நகரமன்ற கூட்டம், தலைவர் செல்வராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. துணைத்தலைவர் பாலமுருகன், ஆணையாளர் தாமரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் துவங்கியதும் பல்வேறு பிரச்னைகள் குறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். கடந்த முறை காவிரியில் வெள்ளம் வந்த போது பாதிக்கப்பட்டவர்கள் பலரின் பெயர் விடுபட்டு போனதால், உரிய வெள்ள நிவாரணம் பெறமுடியவில்லை. இந்த முறை வெள்ளப்பாதிப்பு குறித்து கணக்கெடுத்தால், சம்மந்தப்பட்ட வார்டு உறுப்பினர்களின் முன்னிலையில் எடுக்க வேண்டுமென அதிமுக கவுன்சிலர் சம்பூரணம் கேட்டுக்கொண்டார். உறுப்பினரின் கோரிக்கை குறித்து, வருவாய்த்துறையினரிடம் தெரிவிக்கப்படுமென தலைவர் தெரிவித்தார்.

கூட்டத்தில் பேசுவதற்கு 5 நிமிடம் மட்டுமே ஒதுக்குவதால், பல பிரச்னைகள் குறித்து பேச முடியவில்லை என கூறிய அதிமுக செந்தில், தனது வார்டில் நாய்த்தொல்லை அதிகரித்து விட்டது. அதை கட்டுப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டார். மதிமுக கவுன்சிலர் சிவா பேசுகையில், காவிரி வெள்ளப் பாதிப்பிற்கு உள்ளானவர்களுக்கு மாற்று இடத்தில் வீட்டுமனை வழங்கிய பின்னரும், அவர்கள் பழைய இடத்திலேயே குடியிருப்பது ஏன். வீட்டுமனை பெற்றவர்களை அதற்கான இடத்திற்கு செல்லும்படி அறிவுறுத்தாதது ஏன் என கேள்வி எழுப்பினார். அடுக்கு மாடி குடியிருப்பு கட்டும் திட்டம் நிறைவேறினால், இந்த பிரச்னை எழாது என்றும், இது குறித்து பொதுப்பணித்துறையினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுமென தலைவர் செல்வராஜ் அறிவித்தார்.

அதிமுக உறுப்பினர் சுஜாதா பேசும் போது, எனது வார்டில் அம்ரூத் குடிநீர் திட்டத்தில் குழாய் அமைக்க தோண்டி 6 மாதங்களாகியும் இன்னும் பணிகள் நிறைவடையவில்லை. பொதுமக்களின் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை என தெரிவித்தார். திமுக உறுப்பினர் குருசசி பேசும் போது, எனது வார்டிலும் அம்ரூத் திட்ட குழாய்கள் நிறைவடைவில்லை. வார்டு முழுவதும் குண்டும், குழியுமாக கிடக்கிறது என்றார். அம்ரூத் குடிநீர் குழாய் ஒப்பந்ததாரரிடம்
இது குறித்து பேசியும், அலட்சியம் காட்டுவதாகவும், கலெக்டரின் கவனத்திற்கு இது குறித்து கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்த தலைவர், பெரியார் நகர் பகுதியில் வீட்டு கழிவுகளை சுத்தப்படுத்த ₹10 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்த உள்ளதாக தெரிவித்தார். கூட்டத்தில், 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

The post அம்ரூத் திட்ட குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணியில் அலட்சியம் appeared first on Dinakaran.

Related Stories: