அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகளுக்கு கட்டுப்பாடு

நாமக்கல், ஆக.1 கொல்லிமலை ஓரி விழாவிற்கு வருகை தரும் அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்பினருக்கான கட்டுப்பாடுகளை மாவட்ட எஸ்.பி. அறிவித்துள்ளார். இது குறித்து நாமக்கல் மாவட்ட எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் வரும் 2, 3ம் தேதிகளில், தமிழக அரசின் சார்பில் வல்வில் ஓரி விழா நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு வெளிமாவட்டங்கள் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் இருந்தும் வரும் பொதுமக்கள் மற்றும் பிற அமைப்புகளை சேர்ந்தவர்கள், தங்கள் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் முறையான தகவல் (வாகனத்தின் விபரம் மற்றும் கலந்து கொள்பவர்களின் விபரம் மற்றும் வரும் பாதையின் விபரம்) தெரிவிக்க வேண்டும். வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவிக்க வரக்கூடிய அமைப்புகளை சார்ந்தவர்கள் சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து புதன்சந்தை, நைனாமலை, துத்திக்குளம், காரவள்ளி சோதனை சாவடி வழியாக மட்டுமே செல்ல வேண்டும். பிற வழிகளில் செல்ல அனுமதியில்லை.

ஓரி விழா முடித்து கீழே இறங்குபவர்கள் செம்மேடு, செங்கரை, முள்ளுக்குறிச்சி சோதனை சாவடி வழியாக சேந்தமங்கலம் பிரிவு ரோடு, அணைப்பாளையம் பைபாஸ் ரோடு வழியாக சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றடைய வேண்டும். வாகனத்தில் வருபவர்கள் யாரும் அமைப்புகள் சார்ந்த கொடிகள், பேனர் மற்றும் உருவப்படம் ஆகியவற்றை வாகனத்தில் கட்டியோ, கையிலோ கொண்டு செல்லக்கூடாது. வாகனத்தில் ஒலிபெருக்கி உபயோகிக்க கூடாது. மது, போதை சம்மந்தப்பட்ட பொருட்களையோ, ஆயுதங்களையோ கொல்லிமலைக்கு கொண்டு செல்லக் கூடாது. விழாவிற்கு வரும் அமைப்புகளை சார்ந்தவர்கள் உரிய அனுமதி சீட்டு பெற்று, அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் தான் வர வேண்டும். அனுமதி பெற்று மேலே செல்லும் வாகனம் 3 மணி நேரத்தில் கீழே இறங்கி விட வேண்டும்.

விழா மலை உச்சியில் நடப்பதால், வாகனத்தை ஓட்டி வருபவர்கள் அதிவேகமாகவோ, அஜாக்கிரதையாக ஓட்டி வரக்கூடாது. விழாவிற்கு வருபவர்கள் யாரையும் தாக்கி பேசவோ, முழக்கங்கள் செய்யவோ கூடாது. விழாவிற்கு வருபவர்களை கண்காணிக்க அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படும். விழாவிற்கு செல்பவர்கள் காரவள்ளி சோதனை சாவடி மற்றும் முள்ளுக்குறிச்சி சோதனை சாவடிகளில், காவல்துறை, வருவாய் துறை, ஆர்டிஓ மற்றும் வனத்துறையினர் மூலம் சோதனை செய்து பின்பே மலை மீது அனுப்பி வைக்கப்படும்.  எனவே, தேவையற்ற பொருட்களையும், தடை செய்யப்பட்ட பொருட்களையும், யாரும் எடுத்து செல்ல வேண்டாம். இவ்வாறு எஸ்பி தெரிவித்துள்ளார்.

The post அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகளுக்கு கட்டுப்பாடு appeared first on Dinakaran.

Related Stories: