×

புதுச்சேரி அரசியலில் திடீர் திருப்பம்; பாஜ அமைச்சரிடம் இருந்து முக்கிய துறைகளை பறித்த முதல்வர் ரங்கசாமி: அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நிலையில் அதிரடி


புதுச்சேரி: அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நிலையில் புதுச்சேரி பாஜ அமைச்சரிடம் இருந்து முக்கிய துறைகளை முதல்வர் ரங்கசாமி பறித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று காலை 9.35 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. கூட்டத் தொடரை கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து உரையாற்றினார். இதையடுத்து நடந்த அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில், இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானமும், பதிலுரையும் இடம்பெறும். நாளை (2ம்தேதி) காலை 9 மணிக்கு நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி 2024-2025ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார். தொடர்ந்து 14ம்தேதி வரை கூட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டதாக சபாநாயகர் செல்வம் தெரிவித்தார்.

சட்டசபை கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக முதல்வர் ரங்கசாமி, கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை, ராஜ்நிவாஸில் சந்தித்து அமைச்சர் திருமுருகனுக்கு இலாகா ஒதுக்குவது மற்றும் இலாகாவை மாற்றியமைப்பதற்கான கடிதத்தை வழங்கினார். இதற்கிடையே பிற்பகல் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்குவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தலைமை செயலர் சரத் சவுகான் வெளியிட்டார். அதில், முதல்வர் ரங்கசாமியின் பரிந்துரையின்பேரில் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு மற்றும் இலாகா மாற்றம் செய்து கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அமைச்சர் திருமுருகனுக்கு குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை, வீட்டுவசதி, கலை மற்றும் பண்பாடு, பொருளாதாரம் மற்றும் புள்ளியல் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமாருக்கு தீயணைப்புத்துறை, சிறுபான்மையினர் நலத்துறையுடன் புதிதாக ஆதி திராவிடர் நலத்துறை வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் சாய். ஜெ சரவணன்குமாரிடம் இருந்த குடிமைபொருள் வழங்கல்துறை புதிய அமைச்சர் திருமுருகனுக்கு மாற்றி கொடுக்கப்பட்டிருக்கிறது. முக்கிய துறைகளான போக்குவரத்து, தொழிலாளர் நலம் மற்றும் வேலை வாய்ப்பு, ஊரகவளர்ச்சி முகமை, சமூக மேம்பாடு, ஊரக அடிப்படை வசதிகள் உள்ளிட்ட துறைகள் அமைச்சர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு, மீண்டும் முதல்வருக்கே திரும்பியுள்ளது. குறிப்பாக பாஜ அமைச்சர் சாய் ஜெ சரவணன்குமாரிடம் ஏற்கனவே 6 துறைகள் இருந்த நிலையில், அதில் ஒன்றிய அரசிடம் அதிக நிதியுதவி பெறும் 100 நாள் வேலை திட்ட ஊரக வளர்ச்சி முகமை, சமூக மேம்பாடு, ஊரக அடிப்படை வசதிகள் உள்ளிட்ட 3 முக்கிய துறைகளை பறித்து முதல்வர் ரங்கசாமி, தன்வசம் வைத்துக் கொண்டார்.

அதேநேரத்தில் ரேஷன் கடை திறக்கவுள்ள நிலையில் அவரிடம் இருந்த குடிமைப்பொருள் வழங்கல் துறையும் பறிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ரங்கசாமியின் இந்த இலாகா பறிப்பு தடாலடி நடவடிக்கை, பாஜ வட்டாரத்தை அதிர்ச்சியடைய செய்துள்ளது. சமீபத்தில் முதல்வர் ரங்கசாமிக்கும், அரசுக்கும் எதிராக போர்க்கொடி தூக்கிய பாஜ மற்றும் ஆதரவு எம்எல்ஏக்கள் அமித்ஷாவிடம் புகார் அளித்திருந்தனர். பாஜ மேலிடம் சமரசம் செய்தும், அதிருப்தி எம்எல்ஏக்கள் மனமாறவில்லை. இந்நிலையில்தான் பாஜ அமைச்சர் சாய் ஜெ சரவணன்குமாரிடம் இருந்து முக்கிய துறைகளை முதல்வர் ரங்கசாமி பறித்து உள்ளார்.

விடைபெற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்
சட்டசபை கூட்டத்தில் உரையாற்றிய பின்னர் ஆளுநர் மாளிகையிலிருந்து சி.பி.ராதாகிருஷ்ணன் விடைபெற்றார். அவருக்கு சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் ஜெ.சரவணன்குமார், எதிர்க்கட்சித் தலைவர் சிவா, தலைமைச்செயலர் சரத் சவுகான், டிஜிபி நிவாஸ் மற்றும் அரசு செயலர்கள் சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வழியனுப்பி வைத்தனர். அவருக்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.  பின்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில், எனக்கு கிடைத்த துணைநிலை ஆளுநர் வாய்ப்பை மக்களுக்கு எவ்வளவு உயர்வாக பணியாற்ற முடியுமோ அந்த வகையில் பணியாற்றிய மனத்திருப்தி உள்ளது.

எழுச்சிமிகு புதுச்சேரி என்பதுதான் தாரகமந்திரமாக இருந்தது. பல்வேறு நிர்வாக சீர்த்திருத்தங்கள் வேண்டும் என்பதை மனதில் கொண்டு குறுகிய காலத்தில் சில சீர்த்திருத்தத்தை எடுத்துள்ளோம்’ என்றார். இதன்பின்னர் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் விடைபெற்றார். புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள கேரளாவைச் சேர்ந்த கைலாசநாதன் வருகிற 7ம்தேதி (புதன்கிழமை) புதுச்சேரி வந்து பொறுப்பேற்றுக் கொள்கிறார்.

The post புதுச்சேரி அரசியலில் திடீர் திருப்பம்; பாஜ அமைச்சரிடம் இருந்து முக்கிய துறைகளை பறித்த முதல்வர் ரங்கசாமி: அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நிலையில் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Rangasami ,Bajaj ,minister ,Rangasamy ,Baja ,Puducherry Assembly ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி நீதிமன்றத்தில் திருமாவளவன் ஆஜர்..!!