வந்தவர் யாரென்று உனக்குத் தெரியுமா?

இறைத்தூதரின் தோழர் உமர்(ரலி) அவர்கள் ஓர் இனிய நிகழ்வைக் கூறுகிறார்:“நாங்கள் ஒரு நாள் இறைத்தூதரின் அருகில் இருந்தபோது தூய வெண்ணிற ஆடை அணிந்த, கறுப்பு நிறத் தலைமுடி உடைய ஒருவர் வந்தார். பயணிக்குரிய எந்த அடையாளமும் அவரிடம் காணப்படவில்லை. எங்கள் யாருக்கும் அவர் யார் என்றும் தெரியவில்லை.“வந்தவர் இறைத்தூதருக்கு மிக நெருக்கமாக அமர்ந்து கொண்டு, ‘முஹம்மதே, இஸ்லாம் என்றால் என்னவென்று எனக்குத் தெரிவியுங்கள்’ என்று கேட்டார். அதற்கு இறைத்தூதர், ‘இஸ்லாம் என்பது இறைவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் இறைவனின் தூதர் என்றும் நீங்கள் உறுதி கூறுவதாகும். மேலும், தொழுகையைக் கடைப்பிடிப்பதும் ஜகாத் வழங்குவதும் ரமலானில் நோன்பு நோற்பதும், சக்தி இருந்தால் ஹஜ் செய்வதுமாகும்’ என்று கூறினார்.“அதற்கு அந்த மனிதர் ‘உண்மை உரைத்தீர்’ என்றார். அதைக் கேட்டு நாங்கள் வியந்தோம். இவரே கேள்வி கேட்டுவிட்டு, இவரே பதிலை உறுதிப்படுத்துகிறாரே என்று.

“அடுத்து அந்த மனிதர், ‘ஈமான் (இறை நம்பிக்கை) பற்றி எனக்குத் தெரிவியுங்கள்’ என்று கேட்டார். அதற்கு இறைத் தூதர், ‘இறைவனையும், வானவர்களையும், வேதங்களையும், தூதர்களையும் நம்புவதாகும். நன்மை தீமை அனைத்தும் விதியின்படியே நடக்கின்றன என்றும் நம்புவதாகும்’ என்றார்.“அதற்கு அந்த மனிதர், ‘உண்மை கூறினீர்’ என்றார். அடுத்து, ‘இஹ்ஸான் பற்றி எனக்குத் தெரிவியுங்கள்’ என்று கேட்டார். இறைத்தூதர்,‘இறைவனை நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பதைப்போன்று வழிபடுவதாகும். அவனை நீங்கள் பார்க்கவில்லை என்றாலும் அவன் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்’ என்றார்.“வந்த மனிதர், ‘மறுமை பற்றி எனக்குக் கூறுங்கள்’ என்று கேட்டுக் கொண்டார். அதற்கு நபிகளார்,’ கேட்பவரைவிட கேட்கப்படுபவர் அதிகம் அறிந்தவர் அல்லர்’ என்றார்.“மூன்று நாட்களுக்குப் பிறகு நபிகளார் என்னிடம், ‘உமரே, வந்தவர் யார் என்று உமக்குத் தெரியுமா?’ என்று கேட்டார். ‘இறைவனும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்’ என்று பதில் கூறினேன்.உடனே நபிகளார், “அவர்தாம் வானவர் தலைவர் ஜிப்ரீல். மார்க்கத்தின் அடிப்படைப் போதனைகளைக் கற்றுத் தருவதற்காக வந்தார்” என்று கூறினார்.இந்த நபிமொழி “ஹதீஸே ஜிப்ரீல்” ஜிப்ரீல் அறிவித்த செய்தி என்றும் போற்றப்படுகிறது.
– சிராஜுல்ஹஸன்

The post வந்தவர் யாரென்று உனக்குத் தெரியுமா? appeared first on Dinakaran.

Related Stories: