3 நாட்களுக்கு ரெட் அலர்ட் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக வட மாநிலங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கேரளாவிலும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் மழை நீடித்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்து வருவதால் தென் மாவட்டங்களில் உள்ள அருவிகளில் அதிக அளவில் மழை நீர் கொட்டி வருகிறது. கேரளாவில் நேற்று இரவு பெய்த கடும் மழை காரணமாக வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு உயிரழப்புகளுடன் கூடிய பேரிடர் நேரிட்டுள்ளது.

இந்நிலையில் மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டிலும் தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. அதற்காக அந்த மாவட்டங்களுக்கு நேற்று ரெட் அலர்ட் விடப்பட்டது. மேலும், தேனி, தென்காசி, மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும், திருப்பூர், திருநெல்வேலி, திண்டுக்கல் மாவட்ட மலைப் பகுதிகள், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்தது.

மேலும் தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 4ம் தேதி வரை, குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளதால் இன்றும் (ஜூலை 31) ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. மேலும் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. மேற்கண்ட பகுதிகளில் தொடர்ச்சியாக கடும் மழைக்கு வாய்ப்பு இருப்பதால் நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.

அத்துடன் மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் ஆகஸ்ட் 2ம் தேதி வரை வீசும்ம். மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு பகுதிகளில் மணிக்கு 65 கிமீ வேகத்தில் இன்று சூறாவளிக் காற்று வீசும், மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் 31ம் தேதியில் மணிக்கு 65 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும். அதனால் மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

The post 3 நாட்களுக்கு ரெட் அலர்ட் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: