பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் சூழ்நிலையை உணர்ந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டியது அவசியம்: கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேட்டி

கேரள மாநிலத்தின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை 105 ஆக அதிகரித்துள்ளதாக மாநில வருவாய்த் துறை தெரிவித்துள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் வயநாடு நிலச்சரிவு தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் விளக்கம் அளித்துள்ளார். நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் 33 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 5,500 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்; 5 அமைச்சர்கள் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளைக் கண்காணித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலவரம் குறித்துக் கேட்டறிந்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப்படையினர் இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர். திருவனந்தபுரம், கோழிக்கோட்டில் சிறப்பு கட்டுபாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மண்ணில் புதைந்த உடல்களை கண்டறிய காவல்துறை மோப்பநாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 48 மணிநேரத்தில் 572 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. கோழிக்கோடு, கண்ணூர், திருச்சூர் ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு மருத்துவக் குழுக்கள் சென்றுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் சூழ்நிலையை உணர்ந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் சூழ்நிலையை உணர்ந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டியது அவசியம்: கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: