பஞ்சாப் மாநிலத்தில் ேசாகம்; கனடாவில் நடந்த விபத்தில் 2 மாணவிகள், சகோதரர் பலி

லூதியானா: கனடாவில் நடந்த சாலை விபத்தில் பஞ்சாபை சேர்ந்த 2 மாணவிகள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். பஞ்சாப் மாநிலம் லூதியானா அடுத்த மலாடு கிராமத்தைச் சேர்ந்த ஹர்மன் சோமல் (23), நவ்ஜோத் சோமல் (19), சங்ரூர் மாவட்டம் சமனா பகுதியை சேர்ந்த ரஸ்ம்தீப் கவுர் (19) ஆகியோர் கனடா நாட்டில் வசித்து வந்தனர். இவர்களில் ஹர்மன் சோமல், நவ்ஜோத் சோமல் ஆகிய இருவரும் சகோதர, சகோதரி ஆவர். ஹர்மன் மோன்க்டன் பகுதியில் உள்ள பகல்நேர காப்பகத்தில் பணிபுரிந்து வந்தார். நவ்ஜோத் சோமல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு படிப்பு விசாவில் கனடா சென்றிருந்தார். ரஸ்ம்தீப் கவுர் படிப்பு விசாவில் கனடா சென்றிருந்தார்.

இவர்கள் மூவரும் டாக்சியில் சென்று கொண்டிருந்தனர். திடீரென டாக்சியின் டயர் வெடித்ததால், கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரின் டிரைவரைத் தவிர மூன்று பேரும் இறந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மோசமான வானிலை காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. காயமடைந்த கார் டிரைவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், உயிரிழந்த 3 பேரின் உடல்களை மீட்டு வருமாறு அவர்களது குடும்பத்தினர் ஒன்றிய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதற்கான தூதரக உதவியை 3 பேரின் குடும்பத்தினர் நாடியுள்ளனர்.

 

The post பஞ்சாப் மாநிலத்தில் ேசாகம்; கனடாவில் நடந்த விபத்தில் 2 மாணவிகள், சகோதரர் பலி appeared first on Dinakaran.

Related Stories: