உங்களிடம் இருப்பது அன்பா? பற்றா? என்ன வேறுபாடு தெரியுமா?

அன்பு (love) என்பது வேறு. பற்று (Attachment) என்பது வேறு. நாம் இரண்டுக்கும் உள்ள நுட்பமான வேற்றுமையை அறியாமல், அன்பு உள்ளவர்களாக நினைத்துக் குழப்பிக் கொள்கிறோம். இப்படி நினைப்பதன் மூலமாக நம்மை அறியாமலேயே நமக்கும் மற்றவர்களுக்கும் துன்பத்தைச் செய்து கொள்கிறோம். ஒரு தாய், தன் குழந்தையிடம் காட்டுவது அன்பு என்று நினைப்போம். அது எப்பொழுது அன்பாகும் தெரியுமா? தன் குழந்தையிடம் காட்டிய அன்பைப் போலவே எல்லாக் குழந்தைகளிடமும், எந்தவிதமான நிபந்தனையும் இன்றி, ஒரு அன்னை அன்பு கொள்வாளானால், அவள் உணர்வுக்கு அன்பு என்று பெயர். ஆனால், தன் குழந்தையை மட்டும் நேசிக்கும் ஒருத்தி, மற்றக் குழந்தையை நேர் எதிர் நிலையில் பார்ப்பது, வெறுப்பது, தீங்கு செய்வது இவை எல்லாம் தன் குழந்தை மீது உள்ள அன்பால் செய்கிறாள் என்று நாம் நினைத்துக் கொள்ளக் கூடாது.

சென்ற வருடம், காரைக்கால் அருகில் ஒரு நிகழ்ச்சி நடந்தது நினைவிருக்கலாம். தன் குழந்தையைவிட வேறு ஒரு குழந்தை அதிக மதிப்பெண் பெறுகிறது என்று நினைத்த ஒரு தாய், அந்தக் குழந்தையின் சாப்பாட்டில் விஷம் வைத்துக் கொன்ற நிகழ்ச்சி நம்மை உறைய வைத்தது.

“ஏன் இப்படிச் செய்தாய்?” என்பதற்கு அந்தப் பெண் சொன்ன காரணம், தன்னுடைய குழந்தையின் மீது அதிக அன்பு என்று சொன்னாள். அது அன்பு அல்ல. அது அந்த குழந்தையின் மீது கொண்ட பந்தம் பற்று. (bondage) அன்பாக இருக்கக் கூடிய தாய், படிப்பிலோ, விளையாட்டிலோ சற்று பின்தங்கிய தன் குழந்தையையும் நேசிப்பாள். மிக அதிக மதிப்பெண் வாங்குகின்ற அடுத்த வீட்டுக் குழந்தையையும் நேசிப்பாள். அவளுக்கு குழந்தை என்றால் குழந்தைதான். இதற்குத்தான் அன்பு என்று பெயர். இந்த வித்தியாசத்தை தெரிவிப்பதுதான் ராமாயணம்.

தசரதன், ராமன் மீது வைத்தது அன்பு அல்ல. அவன் மீது கொண்ட பற்று. கைகேயி, பரதன் மீது வைத்தது அன்பு அல்ல. பற்று. ராமன் மீது அன்பு கொண்டிருந்தால், பரதன் மீதும் அன்பு கொண்டிருப்பான். கைகேயி, பரதனுக்கு ஆட்சி வேண்டும் என்று கேட்டதும் நிதானித்திருப்பான். ‘‘அதனால் என்ன, பரதனுக்கு ஆட்சி. நீ விரும்புகிறாய். பரதனுக்கே முடி சூட்டி விடுகின்றேன்” என்று தசரதன் முடிவெடுத்துவிட்டால், பரதன் வந்து தானே முடிசூட்டி கொள்ளப் போகிறான். அப்பொழுது பரதனுடைய நிலை தெரிந்து இருக்கும் அல்லவா. அன்பு பதட்டத்தை உருவாக்காது. பற்று பதட்டத்தை உருவாக்கும். அது தவறான பாதைக்கே பெரும்பாலும் கூட்டிச் செல்லும். இப்பொழுது, ராமன் மீது கொண்ட பற்றினால் அவன் துடிக்கின்றான். அதனால்தான் கெஞ்சுகின்றான்.

‘‘இந்த ராஜ்யத்தை நீயே எடுத்துக்கொள். சௌகரியமாக ஆண்டு கொள். இந்த ராஜ்ஜியத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் உனக்குத்தான் சொந்தம். நீ எப்படி வேண்டுமானாலும் உன் இஷ்டத்துக்கு அனுபவித்துக் கொள். ஆனால், ஒரே ஒரு விஷயம் மட்டும் உன்னிடம் கெஞ்சி கேட்டுக் கொள்கின்றேன். என் ராமனை மட்டும் காட்டுக்குப் போ என்று சொல்லாதே. என்னுடைய ராமன், என் கண்ணில் இருந்து நீங்கிப் போனால், நான் உயிர் வாழ மாட்டேன். என் உயிர் உன் அபயம்’’ என்கிறான். ஒரு பொருளின் மீது அன்பு கொள்வதற்கும், பற்று கொள்வதற்கும் உள்ள வேறுபாடு இதுதான்!

அன்பு கொண்டவர்கள், ‘‘எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும்’’ என்று நாம் நினைப்போம். ஆனால், பற்று என்பது அவர்களைப் பிரியும் போதும், இழக்கும் போதும் மிகப் பெரிய மனவலியைத் தரும். துடிப்பைத் தரும். அது கடைசியில் உயிரையும் குடிக்கும். சில நேரங்களில் தடையாக இருந்தவர்களின் உயிரையும் குடிக்கும். இதுதான் தசரதன் விஷயத்தில் நடக்கிறது.

பரதனை, பல நாட்கள் பிரிந்து இருக்கக் கூடிய தசரதன், ராமனை சற்றேனும் பிரிய மறுக்கிறான். இதைத் தெரிந்து கொள்ள குலசேகர ஆழ்வாரின் ஒரு பாசுரம் உதவும். தசரதனின் மனநிலையிலிருந்து பாடிய பாசுரம் இது.

“வா போகு வாஇன்னம் வந்தொருகால்
கண்டுபோ, மலராள் கூந்தல்
வேய்போலும் எழில்தோளி தன்பொருட்டா
விடையோன்றன் வில்லைச் செற்றாய்
மாபோகு நெடுங்கானம் வல்வினையேன்
மனமுருக்கும் மகனே, இன்று
நீபோக என்னெஞ்சம் இருபிளவாய்ப்
போகாதே நிற்கு மாறே’’

தசரதன், ஸ்ரீராமனை நொடிநேரம் காணாவிட்டால் உடனே காண்கைக்காக சுமந்த்ரனையிட்டு வரும்படி அழைப்பான். பின்பு அவ்விராமனது பின்னழகையும் நடையழகையும் காண்கைக்காக “போ” என்பான்; பின்னையும் கண்மறையப் போனவாறே ஆற்றாமையால் “வா’’ என்பான். மீண்டும் வந்தவாறே இன்னம் ஒருகால் கண்டுபோ என்பான்.

இப்படி மகனிடத்து, அவனது பிரிவை ஆற்றமாட்டாத மனச் சுழற்சியால் பலமுறை வா என்றும் போ என்றும் மாறிமாறிச் சொல்லி வருவானாம். இந்த உணர்வு மற்ற பிள்ளைகளிடம் இல்லை. அதனால்தான் ராமனை “என்னோடு காட்டுக்கு அனுப்பு” என்றதும், மிகுந்த வலியோடு சில நாட்கள் மட்டும் விஸ்வாமித்திர முனிவரோடு அனுப்பினான். அப்பொழுதும் இதே மன உளைச்சல்தான் அடைந்தான். இப்பொழுது 14 ஆண்டுகள் பிரியப்போகிறானே என்று அவன் துன்பம் அடைகிறான். இப்படி வருத்தத்தையும் துன்பத்தையும் அடைந்த தசரதன், மண்ணில் விழுந்து புலம்பி கைகேயியை பலவாறு கெஞ்சுகிறான். ஒரு விஷயம் பாருங்கள். ஒருவர் மீது கொண்ட பற்றுக்கு இடையூறாக ஏற்கெனவே பற்று கொண்டவர்கள் வந்துவிட்டால், அந்த பற்று விரோதமாகிவிடுகிறது. கைகேயி, பரதனுக்கு ஆட்சி வேண்டும் என்று கேட்பதற்கு முன், அவள் அவனுக்கு விருப்பமான மனைவி.

ராமன் விருப்பமான மகன். விருப்பமான மகனை காட்டிற்குப் போகச் சொல்லுகின்றாள், விருப்பமான மனைவி. இங்கே இரண்டு பற்றுகளுக்கும் முரண் (conflict) ஏற்படுகிறது.
விளைவு?

இங்கே விருப்பமான மனைவி கைகேயி, வெறுப்பான மனைவியாகின்றாள். கைகேயின் விருப்பமான கணவன் தசரதன், வெறுப்புக்கு உரியவனாக மாறுகிறான். பரதனின் மீது கொண்ட பற்று, தான் வளர்த்த ராமனைப் பிரித்து காட்டுக் குப்போ என்று சொல்ல வைக்கிறது. கணவனின் உயிருக்கு எமனாக மாறும் கைகேயியை, சற்றும் தயங்காமலும் மனம் தளராமலும், ‘‘இதோ பார், நீ இரண்டு வரங்களைக் கொடுக்கிறாயா, இல்லையா… ஒன்று, கொடுக்கிறேன் என்று சொல். அல்லது இல்லை என்று சொல். அந்த உறுதிகூட உன்னிடத்தில் இல்லையே, நீ கொடுத்தால் வாங்கிக் கொள்ளுகின்றேன். இல்லை என்று சொன்னால் உயிரை விட்டுவிடுகிறேன்’’ என்று பேசும் நிலைக்குக் கொண்டு செல்கிறது.

The post உங்களிடம் இருப்பது அன்பா? பற்றா? என்ன வேறுபாடு தெரியுமா? appeared first on Dinakaran.

Related Stories: