இதற்கு மிகப்பெரிய உதாரணம் கொரோனா.
கொரோனா காலகட்டத்தில் எச்சரிக்கையுடன் இருந்தவர்கள் நோயின் தாக்குதலில் சிக்கினாலும், ஒரு கட்டத்தில் அவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைகளை கடைபிடித்ததால் விரைவில் அதிலிருந்து மீண்டனர். ஆனால், சிலர் மிகவும் தாமதமாக மருத்துவமனையில் சேர்ந்து அதன் பின்பு கடும் பக்க விளைவுகளுக்கு ஆளாகி பலர் தங்கள் உயிரிழந்தனர். அலட்சியம் மற்றும் சுகாதாரமின்மை காரணமாக பெரும்பாலான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
அந்த வகையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏற்படும் நோய்களிலிருந்து நாம் நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும், எத்தகைய வழிமுறைகளை கையாள வேண்டும், என மருத்துவர்கள் நமக்கு பல ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். ஆனால் நாம் அதனை முறையாக கவனிக்காமல் அலட்சியப்படுத்துவதால் விளைவுகள் அதிகமாகின்றன. மனிதர்களுக்கு காய்ச்சல் என்பது காலங்காலமாக இருந்து வருகின்ற ஒரு வியாதி. மழைக்காலத்தில் மட்டுமில்லாமல் வெயில் காலத்திலும் இந்த காய்ச்சல் மனிதர்களை அவதிக்குள்ளாக்குகிறது.
பொதுவாக காய்ச்சல் வந்தால் எதற்காக வருகிறது என்பதை பற்றி யோசிக்காமல், 2, 3 நாட்கள் முதலில் மாத்திரைகளை எடுத்துக் கொள்வோம். அது சரியாகவில்லை என்றால், அதன் பிறகு மருத்துவமனைக்கு சென்று ரத்த பரிசோதனை செய்தால் தான் நமக்கு எந்த வகையான காய்ச்சல் என்பது தெரிய வரும். நீண்ட நாட்கள் வீட்டிலேயே மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. அந்த வகையில் தற்போது சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது.
குறிப்பாக சென்னை, கோவை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தேனி, மதுரை, திருநெல்வேலி, நாமக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனை கட்டுப்படுத்தும் முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் ஜூலை 24ம் தேதி வரை 6565 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். மேலும் பன்றி காய்ச்சலால் 390 பேரும், ப்ளூ காய்ச்சலால் 56 பேரும், எலி காய்ச்சலால் 1481 பேரும், உன்னி காய்ச்சலால் 2639 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வருடம் மட்டும் டெங்கு காய்ச்சலால் 3 பேர் உயரிழந்துள்ளனர். வரும் நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் காய்ச்சலின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 476 நடமாடும் மருத்துவக் குழுக்கள் தமிழ்நாடு முழுவதும் பணியாற்றி வருகின்றன. அதேபோல 805 பள்ளி மருத்துவ குழுக்கள் இயங்கி வருகின்றன. இவ்வாறு பருவமழைக்கு முன்பு டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகரிக்க கூடும் என்பதால் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
டெங்கு பாதிப்பை பொறுத்தவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தாலும் உயிர் இழப்புக்கள் குறைவாகத்தான் உள்ளன. அதற்கு காரணம் தற்போது மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு டெங்கு பாதிப்பை தடுக்கும் வழிமுறைகள் குறித்து பெரம்பூர் சென் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் வெங்கடேசன் கூறுகையில், ‘‘டெங்கு காய்ச்சல் ஏடிஎஸ் என்ற கொசு மூலம் பரவுகிறது. இது ஒரு பெண் கொசு. நல்ல சுத்தமான நீரில் இது அதிகமான முட்டைகளை இடுகிறது.
லட்சக்கணக்கில் முட்டைகளை போட்டுவிட்டு செல்கிறது. நமது வீட்டைச் சுற்றி பழைய டயர், குப்பை கழிவுகள், மொட்டை மாடியில் போட்டு வைத்துள்ள பழைய மர சாமான்கள், பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களில் மழை நீர் தேங்கி நிற்பதால் ஏடிஎஸ் கொசு உற்பத்தியாகிறது. இது முதலில் நமது உடலில் முட்டிக்கு கீழே கடிக்கும். அதுவும் பகலில் தான் இது கடிக்கும். முட்டி காலுக்கு மேல் இதனால் பறக்க முடியாது. இதனால் முட்டிக்காலுக்கு கீழ் பாதம் உள்ளிட்ட இடங்களில் தான் கடிக்கும்.
2 நாட்கள் தொடர்ந்து காய்ச்சல், டெங்கு அறிகுறியும் இருந்தால் ரத்தப் பரிசோதனை செய்து எந்த வகையான காய்ச்சல் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். ஆரம்ப கட்டத்திலேயே நாம் டெங்கு காய்ச்சல் என்பதை கண்டுபிடித்து விட்டால் எளிதாக அதிலிருந்து விடுபடலாம். நமது உடலில் தண்ணீர் அளவை சரியாக பராமரிக்க வேண்டும். நல்ல ஆகாரங்களை, நீர்சத்து நிறைந்த ஆதாரங்களை சாப்பிட வேண்டும். சரியான நேரத்திற்கு மாத்திரை போட்டு நீர் நிறைந்த ஆகாரங்களை எடுத்துக் கொண்டால் வீட்டில் இருந்தவாறு இந்த காய்ச்சலில் இருந்து விடுபட்டு விடலாம்.
சிலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் அவர்கள் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை குறையாத அளவிற்கு பார்த்துக் கொள்ள வேண்டும். சிலருக்கு உடல்நிலை மிகவும் பலவீனமாக இருக்கும் அவர்கள் கண்டிப்பாக மருத்துவமனையில் சேர்ந்து மருத்துவர் கண்காணிப்பில் இருந்து குளுக்கோஸ் போட்டு கொள்வதன் மூலம் எளிதில் இந்த நோயிலிருந்து விடுபடலாம்,’’ என்றார்.
டெங்கு காய்ச்சல் குறித்து சித்தா மருத்துவமனையின் உதவி மருத்துவ அலுவலர் டாக்டர் சாய் சதீஷ் கூறுகையில்,‘‘டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு குடிநீர் சிறந்த மருந்தாக உள்ளது. பப்பாளி இலைச்சாறு, மலை வேப்பிலை சாறு ஆகியவை டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த பலன் அளிக்கிறது. அலோபதி மருந்து சாப்பிடும் போது இதனையும் சேர்த்து உட்கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனைகளில் தற்போது நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது. இவற்றை பொதுமக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
டெங்குவை பொறுத்தவரை ஆரம்ப நிலையிலேயே அதனை நாம் கண்டறிய வேண்டும். ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் அதனை எளிய முறையில் நாம் எதிர்கொள்ளலாம். நிலவேம்பு குடிநீரை பொறுத்தவரை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக கிடைக்கிறது. காய்ச்சல் இல்லாதவர்களும் முன்னெச்சரிக்கையாக நிலவேம்பு குடிநீர் குடிக்கலாம். 10 கிராம் நிலவேம்பு பொடி எடுத்து 250 மி.லிட்டர் தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து அது பாதியாக 125 மில்லி லிட்டர் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும்.
காய்ச்சல் உள்ளவர்கள் 3 முறையும், காய்ச்சல் இல்லாதவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முறையும் குடித்தால் போதுமானது. கொசு உற்பத்தியின் மூலம் இந்த நோய் பரவுவதால் நொச்சி இலை புகையை அதிக அளவில் நம் வீட்டை சுற்றி போட வேண்டும். நொச்சி செடிகளை வளர்த்தால் கொசு தொல்லையில் இருந்து தப்பிக்கலாம். இந்த கொசு முட்டிக்கு கீழ் மட்டுமே கடிப்பதால் கற்பூராதி தைலம், நொச்சி தைலம் போன்ற தைலங்களை குழந்தைகளுக்கு முட்டிக்கு கீழ் தடவி விட்டால் கொசுக்கள் கடிக்காது. காலுக்கு சாக்ஸ் பயன்படுத்துவது சுடு தண்ணீரை குடிப்பது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதன் மூலம் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கலாம்,’’ என்றார்.
* தட்டணுக்களை பாதிக்கும்
பொதுவாக ஒவ்வொரு காய்ச்சலும் உடலில் ஒவ்வொரு உறுப்புக்களை பாதிக்கும் தன்மை உடையது. உதாரணத்திற்கு, மலேரியா என்றால் அது லிவரை பாதிக்கும். டைபாய்டு என்றால் குடலை பாதிக்கும். இந்த ஏடிஎஸ் கொசு கடித்து டெங்கு பாதித்தால் உடலில் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை பாதிக்கும். காய்ச்சல் வந்த 3வது நாளிலிருந்து தட்டணுக்களை பாதிக்க செய்கிறது. இதனால் நீண்ட நாட்கள் வீட்டிலேயே காய்ச்சல் மருந்துகளை எடுத்துக் கொண்டால் சில நேரங்களில் அது ஆபத்தை ஏற்படுத்தலாம். அதனால் முடிந்தவரை ஒரு நாளைக்கு மேல் காய்ச்சல் இருந்தால் மருத்துவர்களை அணுகி உரிய பரிசோதனை எடுத்துக் கொண்டால் தட்டணுக்கள் குறைவதை தடுக்க முடியும்.
* அலட்சியம் வேண்டாம்
முதலில் காய்ச்சல் வரும்போது பொதுவாக பலரும் 2 நாட்கள் அல்லது 3 நாட்கள் வரை மருத்துவமனைக்கு செல்ல மாட்டார்கள். தாங்களாகவே மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வார்கள். அதன் பிறகு பாதிப்பு அதிகமானதும் மருத்துவமனைக்கு செல்வார்கள். இதனால் தட்டணுக்கள் குறைந்து கொண்டே வரும்.
இதனால் டெங்கு பாதிப்பு உள்ள காலகட்டத்தில் காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று காய்ச்சல் பாதிப்பிற்கு உரிய சிகிச்சை பெறுவதை பொதுமக்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும் மருத்துவர்கள் தரும் மருந்துகளை 2 நாட்கள் பயன்படுத்தி விட்டு உடனடியாக காய்ச்சல் சரியாகிவிட்டது என மருந்துகளை நிறுத்தக்கூடாது. மருத்துவர்கள் தெரிவிக்கும் நாட்கள் வரை மருந்துகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும். அப்போதுதான் முழு நிவாரணம் கிடைக்கும்.
The post சென்னை உட்பட 9 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிப்பு; டெங்குவை விரட்டும் வழிமுறைகள்: அலோபதி மற்றும் சித்த மருத்துவர்கள் ஆலோசனை appeared first on Dinakaran.