சென்னை விமான நிலைய வருகை பகுதியில் இயங்கிய வாகனங்கள் பிக்அப் பாயின்ட் பார்க்கிங் பகுதிக்கு திடீர் மாற்றம்: முன்னறிவிப்பு இல்லாததால் மூட்டை முடிச்சுகளுடன் பயணிகள் தவிப்பு

மீனம்பாக்கம்: சென்னை விமான நிலைய வருகை பகுதியில் இயங்கிய வாகனங்கள் பிக்அப் பாயின்ட், மல்லடி லெவல் கார் பார்க்கிங் பகுதிக்கு முன்னறிவிப்பின்றி மாற்றப்பட்டதால், மூட்டை முடிச்சுகளுடன் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்களில் வருகை பயணிகள் வெளியில் வந்து, தரைதளத்தில் அமைக்கப்பட்டுள்ள பிக்கப் பாய்ன்டில் நின்று, வாடகை கார்களில் ஏறி அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு வீடுகளுக்கு புறப்பட்டு செல்வது வழக்கம். இந்நிலையில், இந்த பிக்அப் பாயின்ட் திடீரென நேற்று முதல் எந்தவித முன்அறிவிப்பும் இல்லாமல் மல்டி லெவல் கார் பார்க்கிங் பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், விமானங்களில் இருந்து இறங்கி வெளியில் வரும் பயணிகள், சுமார் 1 கி.மீ. தூரம் நடந்து சென்று, மல்டி லெவல் கார் பார்க்கிங் பகுதிக்கு சென்று வாகனங்களில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்காக, பயணிகள் வருகை பகுதியில் இருந்து மல்டி லெவல் கார் பார்க்கிங் பகுதிக்கு அழைத்துச் செல்ல, இலவச பேட்டரி வாகனங்கள் இயக்கப்படுகிறது. ஆனால் பேட்டரி வாகனங்கள் போதுமான அளவு இல்லாததால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதோடு பேட்டரி வாகனங்கள், மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்டிடத்தின் தரைப்பகுதியில் நிறுத்தப்படுகிறது. அங்கிருந்து பயணிகள் லிப்ட்கள் மூலம் மல்டி லெவல் கார் பார்க்கிங் 2வது தளம் அல்லது 3வது தளம் சென்று, வாகனங்களில் ஏறி செல்லும் நிலை உள்ளது. இந்த மல்டி லெவல் கார் பார்க்கிங்கில் 3 லிப்ட்டுகள் உள்ளன. ஒவ்வொரு லிப்ட்டிலும், 3 அல்லது 4 பயணிகள் லக்கேஜ்களுடன் ஏறியதும் லிப்ட் ஓவர் லோடு ஆகிவிடுகிறது. இதனால் பயணிகள் பேட்டரி வாகனங்கள், லிப்ட்டுகள் ஆகியவற்றிற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

அதுமட்டுமின்றி இந்த மாற்றம் குறித்து முறையான அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியிடப்பட்டதால் ஏற்கனவே உள்ள பிக்கப் பாயின்ட்களில் காத்து நிற்கும் பயணிகளை தனியார் ஒப்பந்த ஊழியர்கள், செக்யூரிட்டிகள் மிகவும் தரக்குறைவாக ஒருமையில் பேசி, இங்கு நிற்க கூடாது, என்று விரட்டி விடுகின்றனர். இதனால், விமான பயணிகள் மிகுந்த அவமதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, ‘‘மல்டி லெவல் கார் பார்க்கிங்கை கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதியில் இருந்து தனியார் ஒப்பந்ததாரரிடம் ஒப்படைத்து விட்டோம். இந்த பிக்கப் பாயின்ட்களையும் அவர்கள் தான் நிர்வகிக்கின்றனர். தனியார் ஒப்பந்ததாரர்கள், அவர்கள் வசதிக்கு ஏற்ப, இந்த மாற்றத்தை செய்திருக்கின்றனர். இதற்கும் சென்னை விமான நிலைய நிர்வாகத்துக்கும் சம்பந்தமில்லை’’ என்றனர்.

இதனால், வெளிநாடுகளில் இருந்து அல்லது வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் விமான நிலையத்தில் ப்ரீபெய்டு டாக்சியில் பயணிக்க பணம் கட்டி விட்டு, அவர்கள் கொடுக்கும் ரசீதுகளுடன் வெளியில் வந்து, டாக்சிகளை தேடிக் கொண்டிருக்கும் நிலை ஏற்படுகிறது. அதோடு ப்ரீபெய்டு டாக்சி மல்டி லெவல் கார் பார்க்கிங்கில் 3வது தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அதுவரை பயணிகள் அலைய வேண்டிய நிலை ஏற்படுகிறது.

பிக்அப் வாகனங்களுக்கான இலவச நேரம் பறிப்பு
சென்னை விமான நிலையத்தில் பயணிகளை பிக்அப் செய்ய வரும் வாகனங்கள், புறப்பாடு பயணிகளை விமான நிலையத்துக்கு அழைத்து வரும் வாகனங்கள் போன்றவை 8 நிமிடம் வரை நின்று செல்ல பார்க்கிங் கட்டணம் செலுத்த தேவையில்லை. இதனால் சென்னை விமான நிலையத்தில் மல்டி லெவல் கார் பார்க்கிங்கை, இந்திய விமான நிலைய ஆணையத்திடம் பல கோடி கட்டணம் செலுத்தி ஒப்பந்தம் எடுத்துள்ள தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு பார்க்கிங் கட்டண வசூல் பாதிக்கப்படுகிறது. எனவேதான், இந்த புதிய திட்டத்தை இந்திய விமான நிலைய ஆணையத்தின் ஒப்புதலுடன் தனியார் ஒப்பந்த நிறுவனம் செயல்படுத்த தொடங்கியுள்ளது. இதனால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். மேலும், பயணிகளை பிக்அப் செய்ய வந்துள்ள வாகனங்கள் அனைத்தும் பார்க்கிங் கட்டணம் செலுத்திதான் ஆக வேண்டும்.

இதன் மூலம் ஒப்பந்த நிறுவனத்துக்கு ஒரு நாளைக்கு பல லட்சம் கூடுதல் வருமானம் கிடைக்கும். இதன் காரணமாகவே இந்த நடைமுறை புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கு உதவியாக சென்னை விமான நிலைய காவல்நிலைய காவலர்களும் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் எந்த விமான நிலையத்திலும் இதுபோன்ற கெடுபிடிகள் கிடையாது. சென்னை விமான நிலையத்தில் மட்டுமே இதுபோன்ற நிலை புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் நலனையும், விமான நிலையத்தின் சிறப்பையும் காப்பாற்ற தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் தெரிவித்தனர்.

அலைக்கழிப்பு
சென்னை விமான நிலையத்தில் ஏற்கனவே சுங்கச் சோதனை மற்றும் குடியுரிமை சோதனை பகுதிகளில் பயணிகள் நீண்ட நேரம் அலைக்கழிக்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. இதனால் சென்னைக்கு பயணிகள் வருவதை தவிர்த்து, பெங்களூரு, கொச்சி, திருச்சி விமான நிலையங்களுக்கு சென்று, அங்கிருந்து பயணிகள் சிலர் சென்னைக்கு வந்து கொண்டிருக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது சுங்கச் சோதனை, குடியுரிமை சோதனை முடிந்து வெளியில் வரும் பயணிகளை, மல்டி லெவல் கார் பார்க்கிங்கில் 3வது மாடி வரை சென்று, அங்கிருந்து வாகனங்களில் வீடுகளுக்கு செல்லுங்கள் என்று கூறுவது, பயணிகளை பெருமளவு அலைக்கழிப்பது போல் உள்ளது. சென்னை விமான நிலையம் பயணிகளுக்கான விமான நிலையமாக இல்லாமல் தனியார் ஒப்பந்ததாரர்களின் நலனுக்காக செயல்படும் விமான நிலையமாக மாறி வருகிறது என்று பயணிகள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

The post சென்னை விமான நிலைய வருகை பகுதியில் இயங்கிய வாகனங்கள் பிக்அப் பாயின்ட் பார்க்கிங் பகுதிக்கு திடீர் மாற்றம்: முன்னறிவிப்பு இல்லாததால் மூட்டை முடிச்சுகளுடன் பயணிகள் தவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: