தமிழ்நாட்டில் சொகுசுக் கார்களின் பதிவு எண்ணிக்கை உயர்வு: மாநில போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஆணையரகம் தகவல்

சென்னை: 2023 – 2024ம் நிதியாண்டில் தமிழ்நாட்டில் சொகுசு கார்களின் விற்பனை அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரே ஆண்டில் 1668 ஆடம்பர கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் ஆடி, BMW, மெர்சிடிஸ் பென்ஸ், ஜாக்வார் லேண்ட்ரோவர் உள்ளிட்ட ஆடம்பர கார்களை வாங்கும் செல்வந்தர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட உயர்ந்துள்ளது. மாநில போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஆணையரகத்தின் தரவுகளின் படி ரூ.30 லட்சத்திற்கும் அதிகம் மதிப்பு கொண்ட கார்களின் பதிவு சுமார் 46% அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2022-23ல் மொத்தம் 5,797 கார்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 2023-24 நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 8,475ஆக அதிகரித்துள்ளது. முதல் 5 மண்டலங்களின் பதிவு விவரங்களின் அடிப்படையில், சென்னையில் அதிகபட்சமாக 1,668 சொகுசு கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரே ஆண்டில் கோவை மாவட்டத்தில் 510 கார்களும், மதுரையில் 110 கார்களும் பதிவாகி இருக்கின்றன. திருநெல்வேலியில் 95 கார்களும், திருச்சி மண்டலத்தில் 67 சொகுசு கார்களும் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக மாநில போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஆணையரகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

அதிகபட்சமாக ஐந்து மண்டலங்களில் 1,071 BMW வகை கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1,016 கார்களுடன் மெர்சிடிஸ் பென்ஸ் இரண்டாமிடத்தில் உள்ளது. 199 ஜாக்வார் லேண்ட்ரோவர் வகை கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கொரோனா முடக்கத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் தொழிலதிபர்கள் மத்தியில் சொகுசு கார்கள் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதாக கார் விற்பனை முகவர்கள் தெரிவிக்கின்றனர்.

The post தமிழ்நாட்டில் சொகுசுக் கார்களின் பதிவு எண்ணிக்கை உயர்வு: மாநில போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஆணையரகம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: