கூடலூர் அருகே குடியிருப்புகள், விவசாய நிலங்களில் யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த பொதுமக்கள் கவன ஈர்ப்பு போராட்டம்

*காட்டு யானை முட்டியதில் கார் சேதம்

கூடலூர் : கூடலூர் அருகே குடியிருப்புகள், விவசாய நிலங்களில் யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தக்கோரி பொதுமக்கள் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் நள்ளிரவில் தம்பதிகள் வந்த காரை காட்டு யானை முட்டியதில் சேதம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம், கூடலூர் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு பகுதிகளிலும் நிலவும் வன விலங்கு தொல்லைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கூடலூர் அருகே தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட 3-வது டிவிஷன் பகுதியில் தம்பதிகள் வந்த கார் ஒன்றை காட்டு யானை நேற்று முன்தினம் இரவு மறித்து பின்னால் தள்ளி உள்ளது. இதில் காரின் முன்புறம் சேதமடைந்தது. இப்பகுதியை சேர்ந்த சிகாபு, ஜூபைரியா தம்பதி அருகில் உள்ள கேரள மாநிலம் பத்தேரியில் மருத்துவமனைக்கு சென்று வீட்டுக்கு திரும்பி உள்ளனர். இரவு சுமார் 12 மணியளவில் எதிரில் வந்த யானை காரின் முன்புறத்தை தந்தத்தால் முட்டி, சேதப்படுத்தி காரை பின்னால் தள்ளி உள்ளது. அப்போது காரில் வந்த இருவரும் சத்தமிட்டு அலறியுள்ளனர்.

இந்நிலையில் கார் பின்புறம் உள்ள கல் ஒன்றில் மோதி நகர முடியாமல் நின்றதால் யானை அங்கிருந்து சென்றது. இந்நிலையில் தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட 3-வது டிவிஷன் தொழிலாளர் குடியிருப்புகள், கோட்டக்கடவு, முரம்பிலாவு, மரக்கரை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் ஒற்றை யானையை அடர் வன பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி மூன்றாவது டிவிஷன் பகுதியில் பொதுமக்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

The post கூடலூர் அருகே குடியிருப்புகள், விவசாய நிலங்களில் யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த பொதுமக்கள் கவன ஈர்ப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: