ஏன்? எதற்கு? எப்படி?

?திருநள்ளாறு சனிபகவான் கோயிலுக்குச் சென்றுவிட்டு வேறு கோயில்களுக்குச் செல்லக் கூடாதா?
– ரமேஷ், வில்லிவாக்கம்.

சென்றால் என்ன? திருநள்ளாறு என்றவுடனே சனைஷ்சரன் நினைவிற்கு வருகிறார். அதுவும் சனி என்றவுடன் ஏதோ தோஷம் போல ஒரு விதமான பயம் வந்து ஒட்டிக் கொள்கிறது. திருநள்ளாறு ஸ்தலத்தில் சனைஷ்சரன் அமர்ந்து அருள்பாலிக்கும் ஆலயத்தில் மூலவர் அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆவார். அதுவும் ஒரு சிவாலயமே. அது சனைஷ்சரனின் தனிப்பட்ட ஆலயம் அல்ல. அங்கிருக்கும் சிவாலயத்தில் சனைஷ்சரனும் ஒரு பரிவார மூர்த்தி, அவ்வளவுதான். அங்கு சென்று சனைஷ்சரனை வணங்கிய பிறகு வேறு கோயில்களுக்குச் செல்லக் கூடாது என்று சொல்வது முற்றிலும் மூடநம்பிக்கையே. சனைஷ்சரனை தரிசித்த பிறகு தாராளமாக மற்ற ஆலயங்களுக்கும் செல்லலாம். அதில் எந்தவிதமான தவறும் இல்லை.

?தலைவிதியை மாற்ற இறைவனால் முடியுமா?
– கே.ஏ.நாராயணன், மருங்கூர்.

ஒரு ஊரில் ஒரு புகழ்பெற்ற ஜோதிடர் இருந்தார். அவர் கணக்கிட்டுச் சொன்னால் நிச்சயமாக மாறாது. அப்படியே நடந்துவிடும் என்பதால், அவர் புகழ் வெளியூரிலும் பரவி இருந்தது. அவரைக் காண நாள்தோறும் கூட்டம் அலைமோதும். அருகில் உள்ள ஊரில் ஒரு விவசாயி இருந்தான். அவனுக்கு தன்னுடைய எதிர்காலம் பற்றி அறிந்துகொள்ள ஆசை. அவனுக்கு திருமண வயதில் இரண்டு பெண் குழந்தைகள் வேறு இருந்தார்கள். அவர்களை நல்லபடியாக திருமணம் செய்து தர வேண்டுமே என்ற கவலையும் இருந்தது. தன்னுடைய வேலைகளை எல்லாம் முடித்துக்கொண்டு சற்று ஓய்வு கிடைத்த நேரத்தில் அந்த ஜோதிடரைக் காணச் சென்றான். ஜோதிடர் வீட்டில் கூட்டம் அதிகமாக இருந்தது. கால்கடுக்கக் காத்திருந்ததில் மாலை நேரத்தில் அவனுக்கு ஜோதிடரைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. அந்தி சாய்ந்த பிறகு ஜோதிடர் யாரையும் பார்க்கமாட்டார் என்பது இவனுக்குத் தெரியும். இருந்தாலும், சூரியன் மறைவதற்கு இன்னும் சற்று நேரம் இருக்கிறதே என்ற நம்பிக்கையில் இருந்தான்.

ஜோதிடரும் இவனை அமர வைத்து கணக்கிடத் துவங்கினார். அவருடைய முகத்தில் கவலை ரேகைகள் படர்ந்தது. எப்படி கணக்கிட்டுப் பார்த்தாலும் இந்த மனிதன் இன்று இரவு இறந்துவிடுவான் என்றே அவருடைய கணக்கில் புலப்பட்டது. இவனோ வெளியூரில் இருந்து வந்திருக்கிறான், இதை எப்படிச் சொல்வது என்று ஜோதிடருக்குக் கவலை. மீண்டும் மீண்டும் கணக்கிட்டுப் பார்த்தாலும், அதே விடைதான் கிடைத்தது.

ஜோதிடர் அந்த விவசாயியைப் பார்த்து, “அப்பா இன்று அந்தி சாய்ந்துவிட்டது, இது வரை எனக்கு எதுவும் புலப்படவில்லை, நாளை காலை வந்துவிடு, முதல் ஆளாக உன்னைப் பார்த்து பலன் சொல்லிவிடுகிறேன்’’ என்று அனுப்பி வைத்தார். இந்த மனிதன் இன்று இரவே இறந்துவிடுவானே என்று ஜோதிடருக்கு ஒரே கவலை. தான் பூஜிக்கும் பரமேஸ்வரனிடம் அந்த மனிதனுக்கு ஒன்றும் நேராமல் காப்பாற்று என்று பிரார்த்தனை செய்து கொண்டார். மறுநாள் பொழுது புலர்ந்தது. ஜோதிடரும் காலைப் பொழுதில் தன்னுடைய அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு ஜோதிடம் பார்க்க அமர்ந்தார். எதிரில் முதல் ஆளாய் அந்த விவசாயி அமர்ந்திருந்ததைப் பார்த்ததும் இவருக்கு ஆனந்தம் கலந்த ஆச்சரியம். அவனை அழைத்து, “நேற்று நீ இங்கிருந்து புறப்பட்டது முதல் என்ன நடந்தது என்பதைச் சொல்’’ என்றார்.

அவன் சொல்லத் தொடங்கினான்.. “நேற்று நான் இங்கிருந்து என்னுடைய ஊரை நோக்கிச் சென்று கொண்டிருந்தேன். காட்டுப் பாதையில் சென்றால் விரைவாக ஊரைச் சென்றடைந்து விடலாம் என்று குறுக்குப் பாதையில் விரைவாக நடந்தேன். அப்பொழுது பெறும் காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. என்ன செய்வது என்பதறியாமல் அருகில் பார்த்தபொழுது, ஒரு பாழடைந்த கோயில் தென்பட்டது. அங்கு சென்று ஒதுங்கலாம் என்று நினைத்து ஆலயத்திற்குள் நுழைந்தேன்.

அது ஒரு பாழடைந்த சிவாலயம். அங்கு சென்று அமர்ந்திருக்கும்போது என் மனதில் நீண்ட யோசனை. இந்த ஆலயம் இப்படி பாழடைந்துபோய் கிடக்கிறதே, என் கையில் மட்டும் பணம் இருந்திருந்தால் இந்த ஆலயத்தை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்தியிருப்பேனே என்று எண்ணியபடியே உறங்கிப் போனேன். உறக்கத்தில் ஒரு கனவு கண்டேன். நான் பணக்காரனாக இருப்பது போலவும், அந்த ஆலயத்தை சீரமைத்து கும்பாபிஷேகத்தை நடத்துவது போலவும் கனவு கண்டேன். அந்த நேரத்தில் ஏதோ ஒன்று புஸ்… புஸ்.. என்று சீறும் சத்தம் கேட்டு கண்விழித்துப் பார்த்தேன். என் தலைக்கு மேலே ஒரு கருநாகம் என்னை நோக்கிப் பாய்ந்து வந்தது. நான் பயத்தில் ஆலயத்தை விட்டு எழுந்து வெளியில் ஓடி வந்தேன். நான் வெளியே ஓடி வந்த அதே தருணம், ஒரு மிகப் பெரிய இடியானது அந்த ஆலயத்தின் மீது இறங்கி ஆலயமே தரைமட்டமாகிப் போய்விட்டது. நான் அப்படியே பயத்துடன் வீட்டிற்குச் சென்று உறங்கிவிட்டு இதோ காலையில் உங்களைக் காண ஓடோடி வந்திருக்கிறேன்’’ என்றான்.

இதைக் கேட்டதும் ஜோதிடருக்கு புல்லரித்தது. அப்பொழுதுதான் ஜோதிடர் சொன்னார், “அப்பா நேற்று உன் ஜாதகத்தைக் கணித்துப் பார்த்தபோது நேற்றிரவே உன் ஆயுள் முடியும் அளவிற்கு ஒரு மாபெரும் கண்டம் என்பது கணக்கில் தென்பட்டது, அதனை வெல்லவேண்டும் என்றால் ஒரு சிவாலயத்தை எழுப்பி கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்று இருந்தது, ஒரே நாளில் சிவாலயத்தை எழுப்பி கும்பாபிஷேகம் செய்வது என்பது சாத்தியமில்லை என்பதால், இதனை எப்படிச் சொல்வது என்று தெரியாமல் உன்னை அனுப்பிவிட்டேன், ஆனால் நீ தன்னலமில்லா உன் பக்தியினால் விதியையே வென்றுவிட்டாய், கையில் காசில்லாமல் பெற்ற பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்க இயலாத நிலையிலும், சிவாலயத்தை புனரமைத்து அதற்கு கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை நீ மனதில் கொண்டு, அதனையே உன் கனவிலும் மெய்ப்படுத்திப் பார்த்ததை இறைவன் ஏற்றுக் கொண்டு உன் விதியையே மாற்றிவிட்டார்.

இனி உனக்கு வாழ்வில் எந்தவித கண்டமும் இல்லை, தீர்க்காயுளுடன் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து உன் கனவினை நிஜத்தில் நிறைவேற்றுவாய்’’ என்று ஆசீர்வதித்து அனுப்பினாராம். இந்தக் கதையில் இருந்து தலைவிதியை மாற்ற இறைவனால் முடியுமா என்ற உங்கள் கேள்விக்கு விடை கிடைத்திருக்கும் என நம்புகிறேன். சிரத்தையுடன் கூடிய தன்னலமில்லாத பக்தி என்பது நம்மை நிச்சயமாக நல்லபடியாக வாழ வைக்கும்.

?எனக்கு 2400 சதுர அடியில் காலி மனை ஒன்று உள்ளது. அதில் வெங்கடாஜலபதி ஆலயம் கட்ட ஆசைப்படுகிறேன். அதற்கு ஜோதிடம் பார்க்க வேண்டுமா?
– ஸ்ரீரங்கன், திருச்சி.

நிச்சயமாக. முதலில் கோயில் கட்டுவதற்கான யோக அமைப்பு என்பது நமது ஜாதகத்தில் உள்ளதா என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ற வகையில் தற்போது நடந்துகொண்டிருக்கும் தசாபுக்தியும் துணை புரியுமா என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். பொதுவாக, ஆலயம் கட்டும் அமைப்பு என்பது ஜாதகத்தில் அரசயோகம் உள்ளவருக்கு மட்டும்தான் அமையும். ஜோதிடம் பார்த்துவிட்டு அதன் பின்னர் முயற்சியைத் துவக்குவதே நல்லது.

?அதிதி என்று பெண்களுக்கு பெயர் சூட்டுகிறார்களே, அது சிறப்பானதா?
– ப.த.தங்கவேலு, பண்ருட்டி.

சிறப்பானதே. “அதித்யை நமஹ’’ என்று அம்பாளுக்கு உரிய நாமாவளியில் வரும். அதிதி என்றால் ஒப்பற்ற, எல்லையற்ற, சர்வ சுதந்திரமான, ஈடுஇணையற்ற என்று பொருள். ஆக அதிதி என்ற வார்த்தை “ஒப்பில்லாதவள்’’ என்று பொருள் தருவதால், அந்த பெயரை பெண்களுக்கு சூட்டுவது சிறப்பானதே.

The post ஏன்? எதற்கு? எப்படி? appeared first on Dinakaran.

Related Stories: