குற்றவாளி மீது நடவடிக்கை கோரி மக்கள் சாலை மறியல்

திருச்செங்கோடு, ஜூலை 29: திருச்செங்கோடு அருகேயுள்ள சக்திநாயக்கன்பாளையம் குடித் தெருவை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர் செந்தில்குமார் (44). இவர் பக்கத்து வீட்டைச் சேர்ந்த 10 வயது சிறுமியை, நேற்று முன்தினம் கத்தியால் வெட்டினார்.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்த தங்கராசு மற்றும் முத்துவேல் ஆகியோர் செந்தில்குமாரை பிடிக்க முயன்ற போது, அவர்களையும் கத்தியால் குத்தினார். சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். படுகாயம் அடைந்த தங்கராசு, முத்துவேல் ஆகியோர் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து திருச்செங்கோடு புறநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செந்தில்குமார் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், தாயார் சம்பூர்ணம் பராமரிப்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. போலீசார் செந்தில்குமாரை கைது செய்து, பாதுகாப்பில் வைத்திருந்த நிலையில், அவரை மன நோயாளி எனக்கூறி போலீசார் தப்பிக்க வைக்க முயற்சிப்பதாகவும், அவருக்கு மனநோய் இல்லை. அவர் அந்த சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும், இதனை பெற்றோரிடம் கூறி விடுவேன் என கூறியதால், அந்த சிறுமியின் கழுத்தை அறுத்ததாகவும் கூறி, செந்தில்குமாரை கடுமையான சட்டங்களின் கீழ் தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தி, சிறுமியின் தந்தை பிரபு மற்றும் உறவினர்கள் ஊர் பொதுமக்கள் சுமார் 150 பேர் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வாகனப்போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலின் பேரில், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி, டிஎஸ்பி இமயவரம்பன், தாசில்தார் விஜயகாந்த் மற்றும் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அசம்பாவிதம் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதில் செந்தில்குமார் மீது கொலை முயற்சி வழக்கு பதிந்து, மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி தக்க நடவடிக்கை எடுத்து தண்டனை பெற்று தருவோம் என உறுதி அளித்தனர். அதன் பேரில் மறியல் கைவிடப்பட்டது. இதனால் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post குற்றவாளி மீது நடவடிக்கை கோரி மக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Related Stories: