சி.பி.ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிராவுக்கு மாற்றம் 10 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள்: புதுச்சேரிக்கு கைலாசநாதன் நியமனம்

புதுடெல்லி: மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தெலங்கானா உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு புதிய ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநரை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நியமித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிரா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஒன்றியத்தில் 3வது முறையாக பாஜ கூட்டணி அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், சில மாநிலங்களின் ஆளுநர்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது.

சிலர் கூடுதல் பொறுப்பாக ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு ஆளுநராக பொறுப்பு வகித்து வந்தனர். இதனால், ஆளுநர்கள் மாற்றம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி உட்பட 10 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, ஜார்க் கண்ட் மாநில ஆளுநர் மற்றும் கூடுதல் பொறுப்பாக தெலங்கானா, புதுச்சேரி மாநில ஆளுநராக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிரா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய ஆளுநராக முன்னாள் ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் நியமிக்கப்பட்டுள்ளார். தெலங்கானா மாநிலத்திற்கு புதிய ஆளுநராக ஜிஷ்ணு தேவ் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திரிபுராவின் முன்னாள் முதல்வராவார். பிரதமர் மோடியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவரும், கேரளாவை சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான கே.கைலாசநாதன், புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் குஜராத் அரசின் தலைமை முதன்மைச் செயலாளராக பணியாற்றினார். ஓய்வுபெற்ற பிறகு பத்தாண்டுகளுக்கும் மேலாக அந்தப் பதவியில் இருந்தார். கடந்த ஜூன் 30ம் தேதி பதவி விலகினார். கடைசியாக 2021ம் ஆண்டில் கிரண் பேடி புதுச்சேரியின் முழு நேர துணை நிலை ஆளுநர் பொறுப்பில் இருந்தார். அதன்பின், தமிழிசை சவுந்தரராஜன், சிபி ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூடுதல் பொறுப்பாக புதுச்சேரிக்கு ஆளுநராக செயல்பட்டனர். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழு நேர துணை நிலை ஆளுநர் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர, மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பாஜ மூத்த தலைவர் ஹரிபாவ் கிசன்ராவ் பாக்டே, ராஜஸ்தான் மாநில ஆளுநராக இருந்த கல்ராஜ் மிஸ்ராவுக்கு பதிலாக புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். சட்டீஸ்கர் மாநில ஆளுநராக அசாம் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் மக்களவை உறுப்பினர் ராமன் டேக்காவும், மேகாலயா மாநில ஆளுநராக கர்நாடகாவின் மைசூருவைச் சேர்ந்த முன்னாள் மக்களவை உறுப்பினர் சி.எச்.விஜயசங்கரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநராக இருந்த பஞ்சாப் மாநில ஆளுநர் மற்றும் கூடுதல் பொறுப்பாக சண்டிகர் துணை நிலை ஆளுநர் பணியை கவனித்து வந்த பன்வாரிலால் புரோகித், கடந்த சில வாரங்களுக்குமுன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, அசாம் ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா, பஞ்சாப் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் கூடுதல் பொறுப்பாக சண்டிகர் யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநராகவும் செயல்படுவார். சிக்கிம் ஆளுநர் லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா, அசாம் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கூடுதல் பொறுப்பாக மணிப்பூர் மாநில ஆளுநராக செயல்படுவார். சிக்கிம் மாநிலத்தின் புதிய ஆளுநராக பாஜக மூத்த தலைவர் ஓம் பிரகாஷ் மாத்தூர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி, 6 பேர் புதிய ஆளுநர்களாவும், 3 பேர் இடம் மாற்றப்பட்டும் உள்ளனர்.

* மாநிலம் புதிய ஆளுநர் முந்தைய பதவி
மகாராஷ்டிரா சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் ஆளுநர், கூடுதல் பொறுப்பாக தெலங்கானா ஆளுநர், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மற்றும் தமிழ்நாடு மாநில பாஜக மாஜி தலைவர்
புதுச்சேரி: கே.கைலாசநாதன் குஜராத் மாஜி தலைமை முதன்மை செயலாளர்
ராஜஸ்தான்: ஹரிபாவ் கிசான்ராவ் பாக்டே மகாராஷ்டிரா பாஜ மாஜி பேரவை சபாநாயகர்
தெலங்கானா: ஜிஷ்ணு தேவ் வர்மா திரிபுரா மாநில பாஜ மாஜி துணை முதல்வர்
சிக்கிம்: ஓம் பிரகாஷ் மாத்துர் ராஜஸ்தான் பாஜக மூத்த மாஜி எம்பி மற்றும் சிக்கிம் ஆளுநர்
ஜார்கண்ட்: சந்தோஷ்குமார் கங்வார் உத்தரபிரதேச மாநில பாஜ ஒன்றிய மாஜி அமைச்சர்
சட்டீஸ்கர்: ராமன் டேக்கா அசாம் மாநில பாஜ மாஜி எம்பி
மேகாலயா: சி.ஹெச்.விஜயசங்கர் கர்நாடகா மாநில பாஜ மாஜி எம்பி
பஞ்சாப்: குலாப் சந்த் கட்டாரியா ராஜஸ்தான் மாநில பாஜ மாஜி அமைச்சர்
சண்டிகர்: குலாப் சந்த் கட்டாரியா (கூடுதல் பொறுப்பு) ராஜஸ்தான் மாநில பாஜக மாஜி அமைச்சர்
அசாம்: லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா சிக்கிம் ஆளுநர் மற்றும் உத்தரபிரதேச பாஜ மூத்த தலைவர்
மணிப்பூர்: லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா (கூடுதல் பொறுப்பு) சிக்கிம் ஆளுநர் மற்றும் உத்தரபிரதேச பாஜ மூத்த தலைவர்

* தமிழ்நாடு ஆளுநர் பதவி நீட்டிப்பா?
தமிழ்நாடு ஆளுநராக இருக்கும் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் வரும் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இவரது பதவிக்காலம் மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்கப்படும் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகின்றன. இந்நிலையில், புதிய ஆளுநர்கள் நியமனத்தில் தமிழ்நாடு தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. சமீபத்தில் ஆளுநர் ரவி டெல்லி சென்று பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

The post சி.பி.ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிராவுக்கு மாற்றம் 10 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள்: புதுச்சேரிக்கு கைலாசநாதன் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: