×

10 ஆண்டாகியும் எந்த பலனும் இல்லை; கங்கை தூய்மை திட்டத்தின் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் ஸ்வாகா: மீண்டும் மீண்டும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு

புதுடெல்லி: ‘ஆத்துல போட்டாலும் அளந்து போடு’ என்பது பழமொழி. ஆனால், கங்கை ஆற்றில் கணக்கு வழக்கே இல்லாமல் ஒன்றிய பாஜ அரசு பணத்தை கொட்டிக் கொண்டிருக்கிறது. கடந்த 2014ம் ஆண்டு ஒன்றியத்தில் பாஜ பொறுப்பேற்றதும் நவமாமி கங்கே எனப்படும் கங்கை தூய்மை திட்டத்தை மீண்டும் கொண்டு வந்தது. இதற்காக ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கங்கை நதி பாயும் உபி, உத்தரகாண்ட், ஜார்க்கண்ட், டெல்லி, பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கங்கையை சுத்தப்படுத்த பல திட்டங்கள் வகுக்கப்பட்டன. ரூ.20 ஆயிரம் கோடி செலவிட்டும் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், கடந்த 2023ல் அடுத்த 3 ஆண்டுக்கு என மேலும் ரூ.22,500 கோடி ஒதுக்க முடிவு செய்யப்பட்டது.

ஏற்கனவே நடக்கும் திட்டங்களுக்கு ரூ.11,225 கோடியும், புதிய திட்டங்களுக்கு ரூ.11,275 கோடியும் செலவிட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 2024-25ம் நிதியாண்டிற்கு கங்கை தூய்மை திட்டத்திற்கு ரூ.3,345.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முந்தைய பட்ஜெட்டில் ரூ.2,400 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் இம்முறை நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு வெள்ள நிவாரண நிதியாக ஒரு ரூபாய் கூட ஒதுக்க முன்வராத ஒன்றிய அரசு தோல்வித் திட்டம் என தெரிந்தும் ஆண்டுக்கு ஆண்டு பல ஆயிரம் கோடிகளை கங்கையில் போட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் கொந்தளிக்கின்றனர்.

இதுவரை நவமாமி கங்கே திட்டத்தில் 400க்கும் மேற்பட்ட திட்டப்பணிகள் முடிக்கப்பட்டதாக ஒன்றிய அரசு கூறுகிறது. இதில் 200க்கும் மேற்பட்டவை கழிவுநீர் உள்கட்டமைப்பு திட்டங்கள். கங்கையில் நேரடியாக கழிவுநீர் கலப்பதை தடுப்பதை இத்திட்டத்தின் முக்கிய பணியாக இருக்கிறது. இது வெற்றி அடையவில்லை. பீகாரில் ஒரு நாளைக்கு 1,700 மில்லியன் லிட்டர் கழிவுநீர் உற்பத்தியாகும் நிலையில், பாட்னா, பாகல்பூர் தவிர வேறெந்த மாவட்டத்திலும் சுத்திகரிக்கப்படாமலேயே கழிவுநீர் கங்கையில் கலக்கிறது. வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு அரசு பணம் வீணடிக்கப்பட்டிருப்பதாக பசுமை தீர்ப்பாயம் கண்டித்துள்ளது. மேற்கு வங்கத்தில் 9 மாவட்டங்களில் கங்கை நதி பாயும் நிலையில் எந்த மாவட்டத்திலும் மாசுபாட்டை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், பல ஆயிரம் கோடி செலவழித்தும் எந்த பிரயோஜனமும் இல்லை எனவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் குற்றம்சாட்டி உள்ளது. டெல்லியிலும் கங்கை கரையில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டிக்கிடக்கின்றன.

கடந்த 1986ம் ஆண்டும் அப்போதைய பிரதமர் ராஜிவ்காந்தி கங்கை தூய்மை திட்டத்தை முதல் முறையாக கொண்டு வந்தார். 2000ம் ஆண்டு வரை ரூ.9000 கோடி செலவழித்தும் எந்த நல்ல பலனும் கிடைக்காததால் இது தோல்வி அடைந்த திட்டமாக நிபுணர்கள் அறிக்கை அளித்தனர். அதன்பின் அவ்வப்போது கங்கை தூய்மை திட்டத்திற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், 2014ல் பாஜ ஆட்சிக்குப் பிறகுதான் கங்கையை புனித நதியாக குறிப்பிட்டு மீண்டும் தூய்மை திட்டங்கள் தூசி தட்டப்பட்டன.

ஆனால், பல ஆயிரம் கோடி செலவழித்தும் கங்கை தூய்மையாகவில்லை. எனவே உண்மையிலேயே கங்கையை தூய்மை செய்ய அறிவிக்கப்பட்ட நிதிகள் செலவழிக்கப்படுகிறதா அல்லது வேறெங்காவது மடை மாற்றப்படுகிறதா என சமூக ஆர்வலர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். ஆற்றில் போட்ட பணத்துக்கு என்ன கணக்கு இருக்கிறது என பல கோடிகள் சுருட்டப்படுகிறதா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

The post 10 ஆண்டாகியும் எந்த பலனும் இல்லை; கங்கை தூய்மை திட்டத்தின் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் ஸ்வாகா: மீண்டும் மீண்டும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Tags : Swaga ,NEW DELHI ,Union BJP government ,Ganga ,BJP ,Ganges ,Navamami Gange ,Dinakaran ,
× RELATED தாமரை சின்னத்துக்கு தடை கோரிய மனுவை...