×

புதுச்சேரி சாராய கடைகளில் தமிழக போலீசார் அதிரடி ரெய்டு: ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள பாக்கெட்டுகள் பறிமுதல்

புதுவை: புதுச்சேரி சாராய கடைக்குள் தமிழக போலீசார் நேற்று அதிரடியாக நுழைந்து சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்ததோடு, காசாளரை விசாரணைக்காக அழைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த மாதம் விஷ சாராயம் அருந்தி 67 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து தமிழக போலீசார் தமிழகத்தையொட்டியுள்ள புதுவைப் பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுவை மாநிலம் திருபுவனை அடுத்த ஆண்டியார்பாளையம் சாராயக்கடையில் இருந்து பாக்கெட் சாராயம் விற்கப்படுவதாக தமிழக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கண்டமங்கலம் போலீசார் சம்பந்தப்பட்ட சாராயக்கடையில் அதிரடியாக நுழைந்து நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது நான்கு சாக்கு பைகளில் இருந்த ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள சாராய பாக்கெட்டுகள் மற்றும் சாராயத்தை பாக்கெட் அடிக்க பயன்படுத்தும் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சாராயக்கடை காசாளர் பிரமானந்தம் என்பவரை தமிழக போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் 2 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த திருபுவனை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று எங்களுடைய அனுமதி இல்லாமல் புதுச்சேரி சாராயக்கடையில் எப்படி சோதனை நடத்தலாம் என கேள்வி எழுப்பி வாக்குவாதம் செய்தனர்.புதுவையில் சாராயக்கடைகளில் பாக்கெட் சாராயம் விற்பதற்கு அனுமதி இல்லை. பாட்டிலில் மட்டுமே விற்க அனுமதியிருக்கிறது. இங்கிருந்து தமிழக பகுதிக்கு கொண்டு சென்று சாராயம் விற்ற நபரை கைது செய்து அவருடைய வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே, இப்பகுதியில் சோதனை நடத்தியதாக திருபுவனை போலீசாரிடம் தமிழக போலீசார் கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட திருபுவனை போலீசார், அங்கிருந்து கிளம்பி சென்றனர். இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.புதுச்சேரி சாராயக்கடைகளில் தமிழக போலீசார் ரெய்டு நடத்தி சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post புதுச்சேரி சாராய கடைகளில் தமிழக போலீசார் அதிரடி ரெய்டு: ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள பாக்கெட்டுகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : PUDUCHERRY ,RS 40 THOUSAND ,Puduwai ,Tamil Nadu police ,Karunapuram, Kallakurichi ,
× RELATED புதுவை கவர்னருடன் நடிகர் விஜய் சேதுபதி சந்திப்பு