குழித்துறை சப்பாத்து பாலத்தில் தடையை மீறி ரீல்ஸ் எடுத்த இளம்பெண்கள்

மார்த்தாண்டம் : குழித்துறை பகுதியில் பாய்ந்து செல்லும் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே சப்பாத்து பாலம் உள்ளது. இந்த பாலம் வழியாக 4 சக்கர வாகனங்கள் செல்ல முடியாது. ஆனால் பொதுமக்கள் பலர் பைக்கிலும், நடந்தும் சென்று வருகின்றனர். தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் குறைவாக வரும் காலங்களில் இந்த சப்பாத்து பாலத்தின் கீழே உள்ள ஷட்டர் வழியாக தண்ணீர் பாய்ந்து செல்லும்.

ஆனால் மழைக்காலம், அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பது உள்ளிட்ட காரணங்களால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். அப்போது இந்த சப்பாத்து பாலத்தை மூழ்கடித்தவாறு தண்ணீர் செல்லும். அந்த நேரத்தில் பாலத்தின் இருபுறமும் தடுப்பு வைக்கப்பட்டு போக்குவரத்துக்கு தடை செய்யப்படும். தற்போது குழித்துறை தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் குழித்துறை சப்பாத்து பாலத்தை மூழ்கடித்தவாறு தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது.

இதையடுத்து குழித்துறை நகராட்சி சார்பில் சப்பாத்து பாலத்தின் இருபுறமும் பொதுமக்கள் செல்லாதவாறு ஷீட் போட்டு தடுப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆபத்தை உணராத பொதுமக்கள் தடுப்பையும் தாண்டி சென்று சப்பாத்து பாலம் வழியாக நடந்து செல்கின்றனர்.இந்த பாலத்தில் பாசிகள் படர்ந்து காணப்படுகிறது. யாரேனும் வழுக்கி விழுந்தால் சப்பாத்து பாலத்தின் மறுபுறம் உள்ள ஆழமான பகுதியில் விழுந்து உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. அதிலும் பலர் தங்களின் குழந்தைகளையும் அழைத்து செல்வது கூடுதல் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இளசுகள் ஒருபடிமேல் சென்று சப்பாத்து பாலத்தில் சுற்றி வந்து கும்மாளம் போடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று சப்பாத்து பாலத்தின் தடுப்பை தாண்டி 2 இளம்பெண்கள் சென்றனர். அவர்கள் கையில் ஐஸ்கீரிம் வைத்துக்கொண்டு அதனை சுவைத்தவாறு சப்பாத்து பாலத்தின் சிறு தூண்களில் அமர்ந்து கொண்டு ஹாயாக பேசினர்.

பின்னர் செல்போனில் ரீல்ஸ் எடுத்து கும்மாளம் போட்டனர். இது ஒருபுறம் நடக்கையில் சப்பாத்து பாலத்தின் ஒரு பகுதியில் சிலர் அழுக்கு துணிகளை கொண்டுவந்து சோப்பு போட்டு துவைத்தனர். துணி துவைத்த பிறகு ஆற்றில் டைவ் அடித்து குளிக்கின்றனர்.

குழித்துறையில் வாவுபலி பொருட்காட்சி 18ம் தேதி முதல் நடந்து வரும் நிலையில் ஏராளமான பொதுமக்கள் இந்த சப்பாத்து பாலத்தில் தடையைமீறி கடந்து செல்கின்றனர். இதனால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தடையை மீறி செல்பவர்களை கட்டுப்படுத்த காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post குழித்துறை சப்பாத்து பாலத்தில் தடையை மீறி ரீல்ஸ் எடுத்த இளம்பெண்கள் appeared first on Dinakaran.

Related Stories: