தொழில்களை தொடங்க முன்வருவோருக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் கலந்துரையாடல் கூட்டத்தில் கலெக்டர் தகவல் உணவு மற்றும் வேளாண்மை தொடர்பான

திருவண்ணாமலை, ஜூலை 27: திருவண்ணாமலை மாவட்டத்தில், உணவு மற்றும் வேளாண்மை தொடர்பான தொழில் தொடங்க முன்வரும் தொழில் முனைவோருக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என கலெக்டர் தெரிவித்தார். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், இந்திய தொழில்துறை கூட்டமைப்பு நிறுவனம் (சிஐஐ) சார்பில், திருவண்ணாமலை மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் நேற்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். அதில், சிஐஐ சென்னை மண்டல மேலாண்மை இயக்குநர் மிலன்வாஹி,சிறு குறு தொழில் நிறுவனங்கள் தமிழ்நாடு ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஆர்.வி.சாரி. மாவட்ட தொழில் மைய மேலாளர் ரவி மற்றும் வர்த்தர்கள் சங்க நிர்வாகிகள், தொழில் முனைவோர் உள்ளிட்டபலர் கலந்துகொண்டனர்.

அப்போது, தொழில் முனைவோர் கலந்துரையாடல் கூட்டத்தை தொடங்கி வைத்து, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசியதாவது: தமிழ்நாட்டில் தொழில் வளம் பெருக வேண்டும் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பல்வேறு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். திருவண்ணாமலை மாவட்டம், தொழில் வளத்தில் பின்தங்கியிருக்கிறது. எனவே, இந்த மாவட்டத்தில் தொழில் வளத்தை பெருக்க தேனையான அனைத்து உதவிகளையும் செய்ய அரசும், மாவட்ட நிர்வாகமும் தயராக உள்ளது. இந்த மாவட்டம் வேளாண்மையை மட்டுமே பிரதானமாக கொண்டிருக்கிறது. எனவே, உணவு மற்றும் வேளாண்மையை அடிப்படையாக கொண்ட தொழில்களை தொடங்க முன்வரும் தொழில் முனைவோருக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும். தனி நபராக மட்டுமின்றி.

குழுவாக இணைந்தும் தொழில்களை தொடங்கலாம். தொழில் தொடங்குவதற்கான அனுமதியை ஒற்றை சாளர முறையில் வழங்க அரசு தயராக இருக்கிறது. அதனால், பல்வேறு துறைகளின் அனுமதிகளையும் எளதில் பெற முடியும். தொழிற்சாலைகள் தொடங்கினால், அதைச்சார்ந்து லட்சக்கணக்கான இளைஞர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற முடியும். அதோடு, அந்த பகுதியின் பொருளாதாரம் மேம்படும். திருவண்ணாமலை மாவட்டத்தில், தொழிற் சார்ந்த பட்டய மற்றும் பட்டப் படிப்புகளில் மாணவர்களை ஊக்குவிக்கவும் தேனையான முயற்சிகள் செய்து வருகிறோம். எனவே, இதுபோன்ற மிகப்பெரிய தொழில் வாய்ப்புகளை வழங்க முன்வரும் திட்டங்களை, திருவண்ணாமலை மாவட்ட தொழில் முனைவோர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் மற்றும் அதற்காக அரசு தரப்பில் வழங்கப்படும் கடனுதவி, மானியம், தொழில்நெறி வழிகாட்டுதல் போன்றவை குறித்து மாவட்ட தொழில் மையம், சிட்கோ, மாவட்ட முன்னோடி வங்கி, தாட்கோ போன்ற துறைகளின் சார்பில் விளக்கப்பட்டது.

The post தொழில்களை தொடங்க முன்வருவோருக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் கலந்துரையாடல் கூட்டத்தில் கலெக்டர் தகவல் உணவு மற்றும் வேளாண்மை தொடர்பான appeared first on Dinakaran.

Related Stories: