நெம்மாரா, போத்துண்டி, நெல்லியாம்பதி பகுதியில் பலத்த காற்றுடன் கனமழையால் கற்பூர மரங்கள் சாய்ந்து விழுந்தன

*பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

பாலக்காடு : பாலக்காடு மாவட்டம் நெம்மாரா, போத்துண்டி, நெல்லியாம்பதி பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் வேப்ப மரங்கள், கற்பூர மரங்கள் அடியோடு சாலையில் சாய்ந்து விழுந்தன. இதனால், அப்பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பாலக்காடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

இதனால், மாவட்டத்தின் சுற்று வட்டார பகுதி சாலையோரங்களில் நிற்கின்ற மரங்கள் கிளைகள் ஒடிந்தும், சில மரங்கள் வேரோடு பெயர்ந்தும் வீழ்ந்தது. நெம்மாரா நெல்லியாம்பதி செருநெல்லி எஸ்டேட் சாலையில் வேப்ப மரம் அடிபெயர்ந்து சாய்ந்து விழுந்தது. இதில், நெல்லியாம்பதி, நெம்மாரா, நெல்லியாம்பதி சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.
தகவல் அறிந்ததும், உடனடியாக சம்பவ இடத்திற்கு நெம்மாரா, கொல்லங்கோடு தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மீட்புக்குழுவினர், வனத்துறை மற்றும் போலீசார், உள்ளாட்சித்துறை ஊழியர்கள் விரைந்து வந்து மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதனால், நெம்மாரா நெல்லியாம்பதி சாலையில் கேரள அரசு பஸ் உட்பட தனியார் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், தோட்டத்தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீடுகளிலே முடங்கி கிடந்தனர். மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியவில்லை. இதேபோல நெம்மாரா போத்துண்டி சாலையில் பேழும்பாறை பகுதியில் கற்பூர மரம் சாய்ந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மீட்புக்குழுவினர், உள்ளாட்சி அமைப்பினர் ஆகியோர் ஒருங்கிணைந்து சாலையில் குறுக்கே கிடந்த மரத்தை வெட்டி அகற்றினர். தொடர்ந்து, நெம்மாரா போத்துண்டி நெல்லியாம்பதி சாலையில் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களிலும், அட்டப்பாடி, ஆனைக்கட்டி, முதலமடை, பரம்பிக்குளம் ஆகிய மலைப்பகுதிகளிலும் சாலையோரங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், உள்ளாட்சி அமைப்பினர், வனத்துறையினர், மரங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.

The post நெம்மாரா, போத்துண்டி, நெல்லியாம்பதி பகுதியில் பலத்த காற்றுடன் கனமழையால் கற்பூர மரங்கள் சாய்ந்து விழுந்தன appeared first on Dinakaran.

Related Stories: