டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மறியல்

தேன்கனிக்கோட்டை, ஜூலை 26: அஞ்செட்டி அருகே நாட்றாம்பாளையம் கிராமத்தில், குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே நாட்றாம்பாளையம் கிராமத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடை, அரசு அலுவலகங்கள், அரசு பள்ளி அருகே உள்ளதால், அந்த கடையை இடம் மாற்ற கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதை தொடர்ந்து நாட்றாம்பாளைம் என்.புதூர் பஸ் நிறுத்தம் அருகே, டாஸ்மாக் கடையை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்தனர். இதையறிந்த என்.புதூர், கூசப்பன் கொட்டாய் கிராம மக்கள், டாஸ்மாக் கடையை தங்கள் பகுதியில் அமைக்க கூடாது என கூறி, நேற்று காலை ஒகேனக்கல் சாலையில், 100க்கும் மேற்பட்டோர், அரசு பஸ்சை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த, அஞ்செட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பங்கஜம் மற்றும் போலீசார், துணை தாசில்தார் பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள், சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்படாது என உறுதி கூறியதின் பேரில், மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மறியல் appeared first on Dinakaran.

Related Stories: