கலெக்டர் அலுவலகம் முன் முதியவர் தீக்குளிக்க முயற்சி மகன் பராமரிக்காமல் தவிக்கவிட்டதாக வேதனை தான செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்யக்கோரி

திருவண்ணாமலை, ஜூலை 26: வயது முதிர்ந்த காலத்தில் தன்னை பராமரிக்காமல் தவிக்கவிட்டதால் மகனுக்கு எழுதிக்கொடுத்த தான செட்டில்மெண்டை ரத்து செய்யக்கோரி, முதியவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா, சொர்பனந்தல் அடுத்த பெரிய கல்தாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜவேலு(65). இவருக்கு சொந்தமான 70 சென்ட் நிலம் கண்ணக்குறுக்கை கிராமத்தில் உள்ளது. அந்த நிலத்தை, அவரது மகனுக்கு கடந்த ஆண்டு தான செட்டில்மெண்ட் மூலம் எழுதிக் கொடுத்துள்ளார். அதன் பிறகு அவரை முறையாக பராமரிக்காமல் கைவிட்டதாக கூறப்படுகிறது, எனவே, இதுதொடர்பாக மனு அளிக்க நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு முதியவர் ராஜவேலு வந்தார். அப்போது, அலுவலக நுழைவாயில் அருகே திடீரென பாட்டிலில் மறைத்து எடுத்து வந்த மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக தடுத்து அவரை மீட்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில், மகனுக்கு எழுதிக்கொடுத்துள்ள தான செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து, அவரிடம் இருந்து கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட போலீசார், தீக்குளிக்க முயற்சி செய்வது சட்ட விரோத செயல் என எச்சரித்து அனுப்பினர்.

The post கலெக்டர் அலுவலகம் முன் முதியவர் தீக்குளிக்க முயற்சி மகன் பராமரிக்காமல் தவிக்கவிட்டதாக வேதனை தான செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்யக்கோரி appeared first on Dinakaran.

Related Stories: